பெர்சே மீதான தடை தொடரும் என்கிறார் உள்துறை அமைச்சர்

மலேசியாவை ‘உலகில் தலை சிறந்த ஜனநாயகமாக’ மாற்றுவதற்கு அரசாங்கம் வாக்குறுதி அளித்த போதிலும் தூய்மையான சுதந்திரமான தேர்தல்களுக்கு போராடும் பெர்சே 2 என்ற  கூட்டமைப்பு மீதான தடையை அகற்றுவதற்கு எந்தக் காரணத்தையும் அரசாங்கம் காணவில்லை.

மக்களவையில் டிஏபி பத்து காஜா உறுப்பினர் போங் போ குவான் தொடுத்த கேள்விக்கு வழங்கிய எழுத்துப்பூர்வமான பதிலில் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“பொது அமைதியை சீர்குலைப்பதற்கு தீவிரமாக ஈடுபட்டதற்காக” அது 1966ம் ஆண்டுக்கான சங்கச் சட்டத்தின் 5வது பிரிவின் கீழ் பெர்சே சட்ட விரோத அமைப்பு எனப் பிரகடனம் செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.

பெர்சே கீழ் வரும் வழிகளில் அதனை செய்ய முயன்றதாக ஹிஷாமுடின் சொன்னார்:

அச்சிடப்பட்ட குறிப்பிட்ட சில பிரசுரங்களை விநியோகம் செய்து அரசாங்கத்தை வீழ்த்துமாறு மக்களை தூண்டி விடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டது

நாட்டின் தோற்றத்துக்குப் பாதகத்தைத் தரக்கூடிய எனக் கருதப்படும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அதனால் பொது ஒழுங்கும் பாதுகாப்பும் சீர்குலைந்ததுடன் நாட்டின் பொருளாதார வளப்பத்துக்கும் இறையாண்மைக்கும் மருட்டல் ஏற்படலாம்.

“ஆகவே பெர்சே தொடர்ந்து சட்ட விரோத அமைப்பாகவே இருந்து வரும்,” எனக் குறிப்பிட்ட ஹிஷாமுடின், தேர்தல் சீர்திருத்தம் மீது நாடாளுமன்றத் தேர்வுக் குழு அமைக்கப்பட்ட போதிலும் அந்த நிலை மாறவில்லை என்றார்.

நாடாளுமன்றத் தேர்வுக் குழு நேற்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவுக்கு 9 எம்பி-க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஐவர் பிஎன் -னைச் சேர்ந்தவர்கள். மூவர் பக்காத்தான் ராக்யாட்டை சார்ந்தவர்கள். ஒருவர் சுயேச்சை உறுப்பினர் ஆவார்.

அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்க அமைச்சர் டாக்டர் மாக்சிமுஸ் ஒங்கிலி தலைமை தாங்கும் அந்தக் குழுவில் பிஎன் சார்பில் அலெக்ஸாண்டர் நந்தா லிங்கி, முகமட் ராட்ஸி ஷேக் அகமட், டாக்டர் போங் சான் ஒன், பி கமலநாதன் ஆகியோர் அங்கம் பெற்றுள்ளனர்.

அஸ்மின் அலி (பிகேஆர்), டாக்டர் முகமட் ஹட்டா ராம்லி (பாஸ்), அந்தோனி லோக் (டிஏபி)ஆகியோர் எதிர்த்தரப்பு உறுப்பினர்கள். வாங்சா மாஜு எம்பி வீ சூ கியோங் சுயேச்சை உறுப்பினர் ஆவார்.