பிகேஆர் ஆலோசகர் அன்வார் இப்ராகிம், 13வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ரக்யாட் ஆட்சிக்கு வந்தால் நீண்டகாலமாக இருந்துவரும் நாடற்றோர் பிரச்னைக்கு ஒரு மாதத்துக்குள் தீர்வு காணப்படும் என்றார்.
நேற்றிரவு கெடா, பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதியில் ஒரு கூட்டத்தில் பேசிய அன்வார், இவ்விவகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் மலாய்மொழி மேன்மைக்கும் மலாய்க்காரர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் எந்த வகையிலும் குறைந்து போகாது என்பதையும் வலியுறுத்தினார்.
“புத்ரா ஜெயாவைக் கைப்பற்றிய ஒரு மாதத்தில் அவர்களுக்குக் குடியுரிமை வழங்குவோம்”, என்று கூறிய அன்வார், குடிமக்களாக இருப்போர் மலாய்மொழி பேசும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று பக்காத்தான் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
“அவர்கள் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் என்பதால் குடிமக்களாகும் தகுதி பெற்றவர்கள்”, என்பதை அவர் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தினார்.
சுதேசி மக்களிலும் நாடற்றோர் உண்டு
நாடற்ற மக்கள் என்ற வகையில் 200,000-300,000 பேர் இருக்கலாம் என்றும் இவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள் என்றும் கருதப்படுகிறது.
ஆனால், அண்மைக்காலமாக சரவாக், சாபா ஆகியவற்றின் தொலைதூரப் பகுதிகளில் வாழும் டாயாக், கடாசன் இன மக்களில் கணிசமான எண்ணிக்கையினர் நாடற்றவர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது.
அவர்களுக்கு சட்டத்தின் செயல்வழி குடியுரிமை பெற்றுத்தரும் இயக்கமொன்றைத் தொடங்கி இருக்கிறார் பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன். இதன் தொடர்பில் டிசம்பர் 12-இல், தேசியப் பதிவுத் துறை தலைமையகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவும் அவர் ஏற்பாடு செய்து வருகிறார்.
சுரேந்திரனே பிகேஆரின் பாடாங் செராய் வேட்பாளர் என்பதையும் அன்வார் அக்கூட்டத்தில் அறிவித்தார். 2008-தேர்தலில் என்,கோபாலகிருஷ்ணன் அத்தொகுதியில் பிகேஆர் வேட்பாளராக போட்டியிட்டு வென்றார். அதன்பின் அவர் கட்சியிலிருந்து விலகி பிஎன்னை ஆதரிக்கும் சுயேச்சை உறுப்பினரானார்.