நஜிப்பை சாட்சியமளிக்க வருமாறு பாரிஸ் நீதிமன்றம் அழைக்கலாம்

அரசாங்க அதிகாரிகளுக்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் தரகுப்பணமாக மில்லியன் கணக்கான ரிங்கிட் கொடுக்கப்பட்டது சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய ஸ்கோர்ப்பியோன் நீர்மூழ்கிக் கப்பல்கள் கொள்முதல் தொடர்பில் சாட்சியமளிக்க வருமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு பாரிஸ் நீதிமன்றம் ஒன்று அழைப்பாணை (சபினா) அனுப்பக் கூடும்.

அந்த இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொள்முதல் செய்வதற்கான 7.3 பில்லியன் ரிங்கிட் பெறும் ஒப்பந்தம் கையெழுத்தான போது நஜிப் தற்காப்பு அமைச்சராக இருந்தார்.

இது போன்று நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்கும் டிசிஎன் என்ற பிரஞ்சு நிறுவனத்திடமிருந்து நீர்மூழ்கிக் கப்பல்கள் கொள்முதல் தொடர்பில் பல மில்லியன் டாலர் தரகுப் பணத்தை பாகிஸ்தான், தைவான் போன்ற நாடுகளின் அதிகாரிகளும் பெற்றுக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த விவகாரம் பிரான்ஸ் நாட்டையே உலுக்கியுள்ளது.

அப்படியே நஜிப்புக்கு சபினா அனுப்பப்பட்டால் இன்னும் ஒரிரு மாதங்களில் அந்த வழக்கு திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் போது அவர் பாரிஸுக்குச் செல்ல வேண்டியிருக்கும்.

என்றாலும் நஜிப்பை நீதிமன்றத்துக்கு வரச் செய்ய முடியுமா என்ற கேள்விக்குப் பதில் அளித்த வழக்குரைஞரான ஜோசப் பிரெஹாம், அந்த யோசனை இன்னும் ‘வெகு தொலைவில்’ இருப்பதாக தெரிவித்தார்.

டிசிஎன் நிறுவனத்துக்கு எதிராக 2009ம் ஆண்டு அந்த வழக்கைத் தொடர்ந்த அரசு சாரா அமைப்பான சுவாராமை அவர் பிரதிநிதிக்கிறார்.

“நஜிப்புக்கு சபினா அனுப்பப்பட முடியும். ஆனால் இப்போதைக்கு அதற்கான சாத்தியம் வெகு தொலைவில் இருப்பதாகவே கருத வேண்டும்,” என அவர் மின் அஞ்சல் வழி பாரிஸிலிருந்து அளித்த பேட்டியில் கூறினார்.

“ஆணை நீதிபதி நியமிக்கப்பட்டதும் நாம் அதனைப் பரிசீலிக்க முடியும்,” என பிரெஹாம் சொன்னார்.

அவர் சென்ற ஆண்டு அந்த வழக்கு தொடர்பில் ஆதாரங்களைத் திரட்டுவதற்காக கோலாலம்பூருக்கு வந்தார்.

பிரஞ்சுச் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கு கிரிமினல் விசாரணைக்குச் செல்ல வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்வதற்கு புலனாய்வு விசாரணையை நடத்துவதற்கு பொறுப்பேற்றுள்ள மாஜிஸ்திரேட் ஒருவரே அந்த ஆணை நீதிபதி ஆவார்.

அந்த நீதிபதி போதுமான ஆதாரம் இல்லை எனக் கண்டு பிடித்தால் அந்த வழக்கை தள்ளுபடி செய்து விடலாம்.

பிரஞ்சு வழக்குரைஞர் லண்டன் சென்றார்

அந்த வழக்கு தொடர்பாக லண்டனில் வசிக்கும் மலேசியர்களுக்கு விளக்குவதற்காக கடந்த வெள்ளிக் கிழமை பிரெஹாம் அங்கு சென்றிருந்தார்.

பிரெஹாமின் சட்டத் தொழில் பங்காளியான வில்லியம் போர்டோன், பினாங்கில் கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அந்த விவகாரம் அனைத்துலக கவனத்தை ஈர்க்கத் தொடங்கியது.

அந்த இரண்டு வழக்குரைஞர்களும் ஆதாய நோக்கமில்லாத ஷெர்பா என்னும் அரசு சாரா அமைப்பைச் சார்ந்தவர்கள். அந்த அமைப்பு பல நாடுகளில் உள்ள அரசாங்கத் தலைவர்களின் ஊழல் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.