தீபக் குறிப்பிட்ட மர்மப் பெண்மணி ‘புதிய தகவல்’ அல்லவா? என்ஜிஓ வினவுகிறது

அரசுசாரா அமைப்பான (என்ஜிஓ) ஜிங்கா 13, சுயேச்சை துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியம் முதலாவது சத்திய பிரமாணத்தை (எஸ்டி) மாற்றி இரண்டாவது சத்திய பிரமாணம் ஒன்றைச் செய்ததில் ‘தெரிந்த பெண்மணி’ ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளார் என்று தீபக் ஜெய்கிஷன் குறிப்பிட்டிருப்பதே மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் விசாரணையைத் தொடங்குவதற்குப் போதுமான காரணமாகும் என்கிறது.

“தீபக், ‘தெரிந்த பெண்மணி’ ஒருவர் முதலாவது சத்திய பிரமாணம் கைவிடப்படாவிட்டால் அவருக்கு நெருக்கமானவர் பாதிக்கப்படுவார் என்பதால் தம்மை வேண்டிக்கொண்டார் என்றும் அதனாலேயே தாம் அம்முயற்சியில் ஈடுபட்டதாகவும் ஒப்புக்கொண்டிருக்கிறார்”, என்று ஜிங்கா 13 ஒருங்கிணப்பாளர் பாரிஸ் மூஸா (வலம்) கூறினார்.

தீபக் அண்மையில் வெளியிட்ட தகவல்கள் குறித்து எம்ஏசிசி நேற்றுக் கருத்துத் தெரிவித்தபோது பாலாமீதான விசாரணை ஏற்கனவே முடிந்து விட்டது என்றும் ஆனால், “புதியதும் பொருத்தமானதுமான தகவலும் சான்றும்” கிடைத்தால் அதை மீண்டும் தொடரலாம் என்று குறிப்பிட்டது. அதன்மீதுதான் அந்த என்ஜிஓ இவ்வாறு எதிர்வினை ஆற்றியது.

கடந்த வாரம், தீபக் மலேசியாகினிக்கு வழங்கிய நேர்காணலில் பாலாவின் முதலாவது சத்திய பிரமாணத்தில் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் தரப்புகளுடன் சம்பந்தப்பட்ட ‘தெரிந்த பெண்மணி’ ஒருவர் அந்த எஸ்டியை மாற்றுவதற்கு உதவுமாறு தம்மைக் கேட்டுக்கொண்டார் என்றும் அதனாலேயே அதில் தாம் ஈடுபபட்டதாகவும் அதற்காக இப்போது வருந்துவதாகவும் கூறியிருந்தார்.

பாலாவின் முதலாவது எஸ்டி, அப்போது துணைப் பிரதமராக இருந்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கும் கொலையுண்ட மங்கோலியப் பெண் அல்டான்துயாவுக்குத் தொடர்புண்டு என்று கூறியது.

அதில், அந்தச் சுயேச்சை துப்பறிவாளர், சத்திய பிரமாணத்தை மாற்றுவதற்கு நஜிப்பின் சகோதரர் நஸிம் ரசாக் தமக்குக் கையூட்டுக் கொடுக்க முன்வந்தார் என்றும் தெரிவித்திருந்தார்.