பினாங்கு பிஎன் தலைவர் தெங் சாங் இயாவ் ‘இஸ்லாத்தைச் சிறுமைப்படுத்தும்’ மனிதர் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்-கின் அரசியல் செயலாளர் ஜைரில் கிர் ஜொஹாரி கூறியிருக்கிறார்.
பினாங்கு இஸ்லாமிய மயத்தை நோக்கிச் செல்கிறது என தெங் விடுத்துள்ள அறிக்கை குறித்து அவர் கருத்துரைத்தார்.
“குறுகிய நோக்கம் கொண்ட அரசியலுக்காக சமயத்தின் முக்கியத்துவத்தை சிறுமைப்படுத்த தெங் விரும்புவதை அவரது அறிக்கை காட்டுகிறது.”
இஸ்லாமிய விவகாரங்களுக்கான மாநில அரசாங்க ஒதுக்கீடு 300 விழுக்காடு அதிகரித்துள்ளது பற்றிக் கருத்துரைத்த போது தெங் அவ்வாறு கூறியிருந்தார்.
பினாங்கு மாநிலத்தில் சீன சமூகத்தைப் பிரதிநிதிக்கும் பினாங்கு சீன நகர மண்டப அமைப்புக்கு மாநில அரசாங்கம் அதிகம் நிதி ஒதுக்கவில்லை என்றும் தெங் குற்றம் சாட்டியிருந்தார்.
“பினாங்கு மக்கள் குறிப்பாக மலாய் சமூகத்தினர் இத்தகைய கடுமையான போக்கைப் பின்பற்றும் முதலமைச்சர் நமக்குத் தேவையா என சிந்திக்க வேண்டும்,” என ஜைரில் விடுத்த அறிக்கை குறிப்பிட்டது.
அடுத்த தேர்தலில் பிஎன் வெற்றி பெற்றால் தெங் முதலமைச்சராக நியமிக்கப்படக் கூடும்.
“தெங் அறிக்கை குறித்துத் தாம் வருத்தமடைந்துள்ள போதிலும் அது எனக்கு வியப்பளிக்கவில்லை. இன, சமயப் பிரச்னைகளைப் பயன்படுத்தி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் பிஎன் வியூகத்தின் தொடர்ச்சியே அதுவாகும்.”
“என்றாலு மக்கள் விவேகமானவர்கள் என்றும் அத்தகைய கறை படிந்த கொள்கை இல்லாத தந்திரங்களுக்கு மக்கள் பலியாக மாட்டார்கள் என்றும் நான் நம்புகிறேன்,” என ஜைரில் மேலும் சொன்னார்.
இஸ்லாமிய மய்யத்துக் கொல்லைகளை விரிவுபடுத்துவது, சமயப் பள்ளிகளுக்கு நிலம் வாங்குவது, அவற்றுக்கு ஆண்டு மானியங்கள் வழங்குவது உட்பட சமய விவகாரங்களுக்கான ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது, இஸ்லாத்தின் கௌரவத்தை உயர்த்துவதற்காகும் என அவர் விளக்கினார்.
இதனிடையே தெங் அறிக்கையை பினாங்கு Solidariti Anak Muda Malaysia (SAMM) அமைப்பும் குறை கூறியுள்ளது. அம்னோ தனது தோழமைக் காட்சிக்கு இஸ்லாம் குறித்து கற்றுக் கொடுக்கத் தவறி விட்டதாகவும் அது சாடியது.
“பினாங்கிலும் வேறு எந்த இடத்திலும் இஸ்லாமிய விவகாரங்களை கவனித்துக் கொள்வதற்கு அம்னோவை நம்ப முடியும் என SAMM நினைக்கவில்லை,” என பிகேஆர் கட்சியுடன் தொடர்புடைய அந்த அரசு சாரா அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான அய்டில் இப்ராஹிம் கூறினார்.