சுவாராம் மீதான விசாரணையை சிசிஎம் தொடருகின்றது; 7 ஊழியர்களுக்கு அழைப்பு

சிசிஎம் என்ற மலேசிய நிறுவன ஆணையம் சுவாராம் மீதான புலனாய்வு அறிக்கைகளை சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்துக்குக் கடந்த மாதம் அனுப்பி விட்ட போதிலும் அது சுவாராமுக்கு எதிரான விசாரணையை இன்னும் தொடருவதாகத் தோன்றுகிறது.

சிசிஎம் அதிகாரிகள் இன்று சுவாராம் ஊழியர்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளதே அவ்வாறு கருதுவதற்கான காரணமாகும்.

“எல்லாம் முடிந்து விட்டதாக நாங்கள் எண்ணிக் கொண்டிருந்தோம். ஆனால் அவர்கள் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருக்கின்றனர். நாங்கள் வியப்படைந்துள்ளோம்,” என சுவாராம் நிர்வாக இயக்குநர் இ நளினி தொடர்பு கொள்ளப்பட்ட போது கூறினார்.

சுவாராம் அலுவலகத்தில் இப்போது பணியாற்றும் ஊழியர்களும் முன்னாள் ஊழியர்களுமாக மொத்தம் ஏழு பேருக்கு 1965-ம் ஆண்டுக்கான நிறுவனச் சட்டத்தின் 7டி(1) பிரிவின் கீழ் இன்று காலை மூன்று சிசிஎம் அதிகாரிகளால் நோட்டீஸ் வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.

டியான் சாவாரி, மைசாரா முகமட் நஜிப், லீ ஹுய் பெய், முன்னாள் ஊழியர்களான ஒங் ஜிங் செங், பாங் பெய் பென், அண்டிக்கா வாகாப், யாப் ஹெங் லுங் ஆகியோரே அந்த எழுவரும் ஆவர்.

சிசிஎம் நடத்தும் விசாரணையில் உதவுவதற்காக அவர்கள் டிசம்பர் 17ம் தேதி காலை பத்து மணிக்கு புத்ராஜெயாவில் உள்ள சிசிஎம் தலைமையகத்திற்கு வருமாறு அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவாராம் மீது சிசிஎம் அனுப்பிய புலனாய்வு அறிக்கைகளை சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் அக்டோபர் தொடக்கத்தில் ஏற்றுக் கொண்டுள்ளதாக உள்நாட்டு வாணிக பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் நவம்பர் முதல் தேதி தகவல் வெளியிட்டிருந்தார்.

சுவாராமின் ‘குழப்பமான அறிக்கைகள்’ மீது சிசிஎம் சமர்பித்த அறிக்கையை புலனாய்வு முழுமையாக இல்லை என்ற காரணத்தின் அடிப்படையில் சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் செப்டம்பர் மாதம் நிராகரித்தது.

அதற்குப் பின்னர் சுவாராம் மீது  சங்கப் பதிவதிகாரியும் போலீசும் தங்கள் சொந்த புலனாய்வை தொடங்கின. இன்று வரை சிசிஎம் எதுவும் செய்யாமல் இருந்தது.

 

TAGS: