புத்ராஜெயாவை பக்காத்தான் ராக்யாட் கைப்பற்றினால் ஐபிபி என்ற சுயேச்சை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் டிஎன்பி கொடுக்கும் 3.47 பில்லியன் ரிங்கிட்டை அந்தக் கூட்டணி மிச்சப்படுத்தும்.
இவ்வாறு பிகேஆர் முதலீட்டு, வர்த்தகப் பிரிவுத் தலைவர் வோங் சென் கூறியிருக்கிறார்.
‘மின்சக்தி ஒதுக்கீட்டு ( reserve ) அளவைக் குறைப்பதின் மூலமும் ஐபிபி-க்களுக்கும் டிஎன்பி-க்கும் இடையிலான நடப்பு ஒப்பந்தங்கள் மீது மீண்டும் பேச்சு நடத்துவதின் மூலமும் அந்தத் தொகையை மிச்சப்படுத்தலாம்,” என அவர் சொன்னார்.
தற்போது ஐபிபி-க்களுக்கு வழங்கப்பட்டுள்ள முதலீட்டு ஆதாய அளவு 19 விழுக்காடு ஆகும். உலக அளவில் 10 விழுக்காடாக இருக்கும் ஆதாய அளவுடன் ஒப்பிடுகையில் 19 விழுக்காடு மிக அதிகம் என பெட்டாலிங் ஜெயாவில் பிகேஆர் தலைமையகத்தில் அவர் நிருபர்களிடம் கூறினார்.
நீண்ட கால ஒப்பந்தங்களையும் மின் உற்பத்தித் துறை எதிர்நோக்கும் குறைவான நடைமுறை ஆபத்துக்களையும் கருத்தில் கொள்ளும் போது அந்த முதலீட்டு ஆதாய அளவை பத்து விழுக்காட்டுக்குக் கொண்டு வர முடியும். அதனால் ஆண்டுக்கு 2.6 பில்லியன் ரிங்கிட் வரையில் டிஎன்பி மிச்சப்படுத்த முடியும் என வோங் நம்புகிறார்.
“ஐபிபி-க்களுடனான அந்த ஒப்பந்தங்களை மறு ஆய்வு செய்ய பக்கத்தான் உறுதி பூண்டுள்ளது,” என்றார் அவர்.
மின்சக்தி ஒதுக்கீட்டு அளவைக் குறைக்க வேண்டும்
தற்போது 38 விழுக்காடாக இருக்கும் மின்சக்தி ஒதுக்கீட்டு அளவை 20 விழுக்காடாக குறைக்க முடியும் என்று கூறிய அவர் 20 விழுக்காடு தான் கூடினபட்ச அளவு என்றார். அந்த ஒரு நடவடிக்கை வழி மட்டுமே டிஎன்பி ஆண்டுக்கு 870 மில்லியன் ரிங்கிட்டை சேமிக்க இயலும்.
அவ்வாறு மிச்சப்படுத்துவதின் மூலம் தற்போது ஆண்டுக்கு 2.14 பில்லியன் ரிங்கிட்டாக இருக்கும் டிஎன்பி ஆதாயத்தை 5.6 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்க முடியும் என பிகேஆர் மதிப்பிடுவதாக அவர் சொன்னார்.
டிஎன்பி நிர்வாகம் அரசியல் தலையீடு இல்லாமல் இயங்குவதையும் பிகேஆர் உறுதி செய்யும் என வோங் மேலும் குறிப்பிட்டார். டிஎன்பி-யின் நிதி நடைமுறை இலக்குகள் அடையப்பட்ட பின்னர் ஆதாயம் அதன் ஊழியர்களுடனும் நிர்வாகத்துடனும் பகிர்ந்து கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
“தற்போது கஸானா நேசனல் டிஎன்பி-யில் வைத்துள்ள பத்து விழுக்காடு பங்குகளை அதன் எல்லா 30,000 ஊழியர்களுக்கு விற்பது பற்றியும் நாங்கள் பரிசீலிப்போம்.”
நடுத்தர வர்க்க உரிமையாளர்களை உருவாக்கவும் தனியார் துறையில் அரசாங்க ஈடுபாட்டை குறைக்கவும் நாங்கள் வகுத்துள்ள பொருளாதாரக் கொள்கையின் ஒரு பகுதியே அதுவாகும்,” எனவும் வோங் குறிப்பிட்டார்.