இந்திய சமூகம் மற்ற சமூகங்களுடன் தேசிய மேம்பாட்டு நீரோட்டத்தில் இணைந்திருக்க வேண்டுமானால் அது பிஎன்-னிலிருந்து ஒதுங்கியிருக்க முடியாது என மஇகா உதவித் தலைவர் எம் சரவணன் கூறுகிறார்.
மற்ற அரசியல் கட்சிகளை ஆதரித்தால் முன்னேற்றகரமான சமுதாயத்திலிருந்து பெரும்பான்மை இந்தியர்கள் விடுபட்டு விடுவர் என அவர் சொன்னார்.
அவர் நேற்றிரவு கூலிமுக்கு அருகில் உள்ள லூனாஸ் பாயா புசார் டாத்தாரான் தாமான் ஹாலியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கெடா மஇகா தீபாவளி உபசரிப்பில் பேசினார்.
“எதிர்க்கட்சிகளைப் போல வெற்று வாக்குறுதிகளை வழங்காத பிஎன் மட்டுமே தங்களுக்கு ஏற்றது என்பதையும் இந்தியர்கள் உணர வேண்டும்,” என்றும் அவர் சொன்னார்.
எதிர்க்கட்சிகள் நிர்வாகம் செய்யும் மாநிலங்களில் இந்திய சமூகம் விடுபட்டுப் போன உணர்வை பெற்றுள்ளதாக கூட்டரசுப் பிரதேச நகர்ப்புற நல்வாழ்வுத் துறை அமைச்சருமான சரவணன் சொன்னார்.
பொருளாதாரம், கல்வி, சமூகம் ஆகிய துறைகளில் நிறைய வாய்ப்புக்களை பிஎன் அரசாங்கம் வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர் அவற்றை பயன்படுத்திக் கொள்வதற்கு இந்தியர்கள் கடுமையாக உழைத்தால் போதும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
பிஎன் -னுக்கு இந்தியர்களுடைய ஆதரவு கிடைப்பதற்கு கடுமையாக உழைக்கும் கெடா மஇகா-வையும் சரவணன் பாராட்டினார். எதிர்வரும் பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டால் அது முக்கியமானது என்றார் அவர்.
வரும் தேர்தலில் 130க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற இடங்களை வென்று பிஎன் தொடர்ந்து நாட்டை ஆட்சி செய்யும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
-பெர்னாமா