இந்துக் குடும்பம் ஒன்று தனது வீட்டு வளாகத்துக்குள் அமைத்திருந்த சாமி மேடையை உடைத்த செப்பாங் நகராட்சி மன்ற நடவடிக்கையை தற்காக்கும் பொருட்டு சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் சேவிய ஜெயகுமார் வழங்கும் ‘முரண்பாடான’ பதில்களை சிலாங்கூர் மசீச பேராளர் ஒருவர் சாடியிருக்கிறார்.
செப்பாங் நகராட்சி மன்றத்தின் நடவடிக்கை ‘தன்மூப்பானது’ என்றும் உடைப்புக்கு முன்னர் நகராட்சி மன்றத் தலைவருடன் ஆலோசனை நடத்தப்படவில்லை என்றும் சொல்வதற்கு அந்த ஸ்ரீ அண்டலாஸ் சட்ட மன்ற உறுப்பினர் ஏன் ஒரு வாரம் காத்திருந்தார் என மசீச சுங்கை பிலேக் உறுப்பினர் யா ஈ வா வினவினார்.
“அது எப்போதும் முரண்பாடாக பேசுகின்ற பக்காத்தான் ராக்யாட்டின் வழக்கத்தையே அது காட்டுகின்றது. எனவே அது வியப்பளிக்கவில்லை,” என யாப் நேற்று விடுத்த அறிக்கை கூறியது.
“மாநில நிர்வாகம் திறமையற்றது, கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்பதை மறைப்பதற்கு சேவியர் வேறு ஏதாவது காரணத்தைச் சொல்ல வேண்டும்.”
செப்பாங் நகராட்சி மன்றத்தைச் சேர்ந்த 30 அமலாக்க அதிகாரிகள் கடந்த நவம்பர் மாதன் 30ம் தேதி செப்பாங் பண்டார் பாரு சாலாக் திங்கியில் உள்ள உமா தேவியின் வீட்டு வளாகத்துக்குள் நுழைந்து அங்கிருந்த சிறிய சாமி மேடையை உடைத்தனர்.
சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட கட்டுமானங்களை அவை எந்த இடத்தில் இருந்தாலும் நடவடிக்கை எடுப்பதற்கு ஊராட்சி மன்றத்துக்கு உரிமை இருப்பதாக முதலில் அந்த நடவடிக்கையை ஆதரித்துப் பேசிய சேவியர் சொன்னதாக யாப் கூறிக் கொண்டார்.
“அவரது தொடக்க கருத்துக்கள்- முழுக்கத் தேவையற்றது, இந்தியர்களுடைய உணர்வுகளை காயப்படுத்தியுள்ளன- அவருக்கு வாக்காளர் ஆதரவைப் பாதித்துள்ளது நிச்சயம்.”
“பொது மக்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்திய பின்னர் தெரியாது எனச் சொல்வது அந்தக் கடுமையான விஷயத்தைத் தீர்ப்பதில் அவர் உண்மையாக இல்லை என்பதையும் காட்டுகின்றது,” என்றார் யாப்.
அந்த விவகாரம் மீது மூன்று சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ள காரணங்கள் ‘பொருத்தமற்றவை’ என்றும் யாப் வருணித்தார். அந்த நகராட்சி மன்ற ஊழியர்கள் மீது அவர்களுக்குக் கட்டுப்பாடு இல்லை என்பதையும் அவர்கள் என்ன செய்கின்றனர் என்பது தங்களுக்கு தெரியாது என்பதையும் அவர்கள் ஒப்புக் கொள்வதாகத் தோன்றுகிறது என்றார் அவர்.
அந்த சாமி மேடையை உடைப்பதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஏன் விசாரணை தொடங்கப்படவில்லை என்றும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் யாப் வினவினார்.
முஸ்லிம் அல்லாதாரின் சமய உரிமைகளை மதிப்பதாகவும் பாதுகாப்பதாகவும் பெருமையடித்துக் கொள்ளும் அந்த சாமி மேடை உடைக்கப்பட்டது மீது மௌனமாக இருக்கும் பாஸ் தலைவர்களையும் அவர் சாடினார்.
“கூட்டரசு, மாநில நிலைகளில் ஹுடுட் சட்டத்தை அமலாக்கும் பாஸ் இலட்சியத்தைக் கருத்தில் கொண்டால் செப்பாங் நகராட்சி மன்ற நடவடிக்கையை அது மறைமுகமாக ஏற்றுக் கொள்கின்றது என அந்த மௌனத்தைக் கருதலாமா ?” என்றும் யாப் கேள்வி எழுப்பினார்.
அந்த சாமி மேடை உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட செப்பாங் நகராட்சி மன்ற அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் அந்த விவகாரம் மீது முழு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் பக்காத்தானிலுள்ள இந்தியத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.