பெர்சே 2.0 பேரணியை ஒடுக்குவதற்கு அரசாங்கம் 2 மில்லியன் ரிங்கிட்டுக்கு மேல் செலவு செய்தது

கடந்த ஜுலை மாதம் நிகழ்ந்த பெர்சே 2.0 பேரணியை ஒடுக்குவதற்கு அரசாங்கம் 2 மில்லியன் ரிங்கிட்டுக்கு மேல் செலவு செய்ததாக உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கூறியுள்ளார்.

கோலாலம்பூரில் ஜுலை 9ம் தேதி நடந்த அந்தப் பேரணியை முடக்குவதற்கு 11,000க்கும் போலீசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாக அவர் நாடாளுமன்றத்தில் இன்று எழுத்துப்பூர்வமாக வழங்கிய பதில் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

கோலாலம்பூர் போலீஸ் பட்டாளத்துக்கு உதவி செய்யும் பொருட்டு நாடு முழுவதிலுமிருந்தும் போலீஸ்காரர்கள் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் 2,018,850 ரிங்கிட்டை அதற்காக செலவு செய்ததை நியாயப்படுத்திய உள்துறை அமைச்சர் “உணவு, குடிநீர், தங்குமிடம், போக்குவரத்து வசதிகள் ஆகிய கூடுதல் தேவைகளுக்காக விரிவான ஏற்பாடுகளை “போலீஸ் படை செய்ய வேண்டியிருந்ததாகச் சொன்னார்.

கிள்ளான் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் அமைதியை நிலை நிறுத்த மொத்தம் 11,046 அதிகாரிகளும் போலீஸ்காரர்களும் பயன்படுத்தப்பட்டனர். அவர்களில் 2,600 பேர் கோலாலம்பூருக்கு வெளியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்,” என்றார் அவர்.

அவர் டிஏபி செபுத்தே எம்பி தெரெசா கோக் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்தார். ஜுலை 6ம் தேதி முதல் ஜுலை 9ம் தேதி வரையில் பாதுகாப்புப் படைகளுக்காக எவ்வளவு தொகை செலவு செய்யப்பட்டது என்ற கேள்வியை தெரெசா எழுப்பியிருந்தார்.

ஜுலை 9ம் தேதி தேர்தல் சீர்திருத்தங்கள் கோரி நாடு முழுவதையும் சேர்ந்த 50,000க்கும் மேற்பட்ட மக்கள் கூட்டரசுத் தலைநகர் சாலைகளில் ஊர்வலமாக சென்றனர். அந்தப் பேரணிக்கு தூய்மையான சுதந்திரமான தேர்தல்களுக்குப் போராடும் பெர்சே 2.0 அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

அந்தப் பேரணியை ஒடுக்குவதற்கு அதிகாரிகள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்தப் பேரணியில் 1,667 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 16 பேர் பிள்ளைகள்.  ‘அமைதியை சீர் குலைத்ததற்காகவும்’ ‘சட்ட விரோத கூட்டத்தில்’ கலந்து கொண்டதற்காகவும் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.