பேராசிரியர்: ஷாரியா பணக்காரர்களுக்கும் அரசியல் ரீதியில் வலுவானவர்களுக்கும் சாதகமாக உள்ளது

இந்த நாட்டில் ஷாரியா சட்டங்கள் பெண்களுக்கு எதிராக பாகுபாட்டைக் காட்டுகின்றன. அவை ‘ பணக்காரர்களுக்கும் அரசியல் ரீதியில் வலுவானவர்களுக்கும்’ சாதகமாக உள்ளன என மகளிர் கருத்தரங்கு ஒன்றில் பேசிய பேராசிரியை ஒருவர் கூறுகிறார்.

“முஸ்லிம் திருமணத்தில் சம நிலை: சவால்களும் சாத்தியங்களும்” என்னும் தலைப்பில் இஸ்லாத்தில் சகோதரிகள் (SIS) நேற்று ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பேசிய சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக பேராசிரியர் மஸ்னா முகமட் அதிர்ச்சி அளிக்கும் அந்தத் தகவலை வெளியிட்டார்.

ஷாரியா சட்டத்தின் கீழ் மணவிலக்குக்குப் பின்னர் இழப்பீடுகளைப் பெறுவதில் பெண்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாக விளக்கிய அவர், குறிப்பாக அது வலிமை வாய்ந்தவர்களுடைய முன்னாள் மனைவியருக்கு பொருந்தும் என்றார்.

தமது கருத்துக்கு ஆதரவாக அவர் மூன்று வழக்குகளை எடுத்துக்காட்டினார்.  அந்த வழக்குகள் “பேரத்தை முழுமையாக்கவில்லை,” என்றார் அவர்.

அந்த வழக்குகளில் சரவாக் முதலமைச்சருடைய புதல்வர் மாஹ்முட் அபு பெக்கிரின் முன்னாள் மனைவி ஷானாஸ் ஏ மஜிட் சம்பந்தப்பட்ட வழக்கும் ஒன்றாகும்.

ஷானாஸ் தம்மை பெக்கிர் விவாகரத்துச் செய்த போது 100 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டையும் சொத்துப் பிரிவினையில் 300 மில்லியன் ரிங்கிட்டும் கோரியிருந்தார். அவருக்கு இன்னும் இழப்பீடு கிடைக்கவில்லை என  மஸ்னா தெரிவித்தார்.

இன்னொரு வழக்கு கினாபாத்தாங்கான் எம்பி பங் மொக்தார் சம்பந்தப்பட்டதாகும். ஷாரியா நீதிமன்றத்துக்குத் தெரிவிக்காமல் அவர் இரண்டாவது மனைவியைத் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஆயிரம் ரிங்கிட் அபராதமும் ஒரு மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இறுதியில் அவருடைய திருமணம் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டது.

மூன்றாவது வழக்கு ஷானாஸ் வழக்கைப் போன்றது என வருணித்த மஸ்னா அந்தச் செய்தி 1998ம் ஆண்டு சிங்கப்பூர் ஸ்டெயிரட்ஸ் டைம்ஸில் வெளியிடப்பட்டது என்றார்.  அது மலேசிய நாளேடுகளில் வெளியிடப்படவில்லை என அவர் கருதுகிறார்.

அதில் சம்பந்தப்பட்ட மலேசிய அமைச்சருடைய பெயரைக் குறிப்பிட மறுத்து விட்ட மஸ்னா, அந்த வழக்கு விவரங்களை பத்திரிக்கைகளில் பார்க்கலாம் எனத் தெரிவித்தார்.

“ஷாரியா நீதிமன்றங்கள் தங்களை நம்பிக்கைக்குரிய நீதி அமைப்புக்களாகக் காட்டிக் கொள்ளவில்லை,” என அவர் மேலும் கூறினார்.

அந்தக் கருத்தரங்கில் பேசிய மற்ற இரண்டு பேச்சாளர்களில் ஈரானின் மனிதவியல் சட்ட நிபுணர் ஜிபா மிர் ஹொஸெய்னியும் ஒருவர் ஆவார். அவர் தமது உரையில் ஆண்கள் பாதுகாப்பாளர்கள் என்னும் கோட்பாட்டை திருமணத்தில் பெண்கள் மீதான ஆண்கள் ஆதிக்கத்திற்கு வழி வகுக்கவில்லை என்பதை கூட்டத்தினர் புரிந்து கொள்வதற்கு உதவியாக திருக்குர் ஆனை மேற்கோள் காட்டினார்.

அவரது விளக்கம் கருத்தரங்கின் தொனியை நிர்ணயம் செய்தது. அதனை மற்ற பேச்சாளர்களும் தங்கள் உரைகளில் அதனைப் பயன்படுத்தினார்கள்.

SIS அமைப்பின் நிர்வாக இயக்குநர் ரத்னா ஒஸ்மான்  மூன்றாவது பேச்சாளர் ஆவார். 1984ம் ஆண்டுக்கான இஸ்லாமிய குடும்பச் சட்டத் திருத்தங்கள் திருமணத்தின் புனிதத்தன்மையையும் மகளிர் உரிமைகளையும் ஒரே நேரத்தில் குறைத்து விட்டதாக அவர் தமது உரையில் தெரிவித்தார்.

முஸ்லிம் உலகில் மிகவும் முன்னேற்றகரமான குடும்பச் சட்டமாகக் கருதப்பட்ட இஸ்லாமியக் குடும்பச் சட்டம் இப்போது ஆண்கள் எளிதாக பலதார மணத்தை நாடுவதற்கும் மணவிலக்குப் பெறுவதற்கும் அனுமதிப்பதாக அவர் சொன்னார்.

ரத்னா தமது கருத்துக்களை வலியுறுத்துவதற்கு படங்களையும் குறிப்புக்களையும் வழங்கினார்.

கருத்தரங்கு முடிவில் கூட்டத்தினர் கை தட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர். அதற்குப் பின்னர் கேள்வி பதில் நிகழ்வும் நடைபெற்றது.

பல அரசு சாரா அமைப்புக்களின் பேராளர்கள், மாணவர்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஆகியோர் SIS அமைப்பு முஸ்லிம் பெண்களுக்கு அவர்களுடைய உரிமைகள் குறித்து உணர வைப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றியும் எதிர்நோக்கும் சவால்கள் பற்றியும் அறிந்து கொள்ள ஆர்வம் காட்டினர்.