ஜொகூர் பாரு மாநகரில் இருந்து ஸ்கூடாய் நோக்கி செல்லும் 7.5-வது மைலில் வலது புறத்தில் கெமாயான் சிட்டி அருகில் அமைந்துள்ளது கம்போங் செமாங்காட். 60 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்ட இக்கிராமம் 5 லோட்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் 156 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட ஒரு லோட் டிசம்பர் 29, 1930-ம் ஆண்டு ஜொகூர் மாநில ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம், செல்வந்தர் தோ ஆ பூன் என்பருவருக்கு கையளித்துள்ளார்.
தோ ஆ பூன் ஏப்ரல் 1932-ல் காலமாகிவிட்டார். அதன் பிறகு, அவர் குடும்பத்தினர் இந்நிலத்தைப் பராமரிப்பதற்காக ஒரு சிலரை அங்கு குடியேற அனுமதித்துள்ளதாக அறியப்படுகிறது. (எழுத்துப் பூர்வமான ஆதாரம் இல்லை) அதே சமயத்தில் இந்த நிலத்தின் அதிகாரப்பூர்வ பிரதிநிதியாக லோ சுய் ஹேங் (Low Sue Heng – மலேசியர் அல்ல) என்பவரை நியமித்துள்ளனர்.
கால ஓட்டத்தில் ஏழை மற்றும் நகர முன்னோடிகள், இந்நிலத்திலும் அருகில் இருந்த காலி நிலத்திலும் தங்களுக்கான குடியிருப்புகளை அமைத்துக் கொண்டனர். நாளடைவில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் கிராமமாக இது உருவானது. ஆரம்பத்தில் இக்கிராமம் கம்போங் பெர்பாடுவான் (Kampung Perpaduan) என்று அழைக்கப்பட்டது.
பல்லின மக்களைக் கொண்ட குடியேற்றக்காரர்கள், தங்களுக்குத் தேவையான வழிபாட்டுத் தளங்கள், சாலைவசதி, மண்டபம், விளையாட்டு இடம் போன்றவற்றை ஏற்படுத்திக்கொண்டனர். 5 பகுதிகளாக இருக்கும் இந்த நிலத்தின் 2 நிலப்பட்டா (லோட் 149 – 44 ஏக்கர், PTD 85545 – 4.8 ஏக்கர்) பால்கோன் யுனிகிரின் சென்.பெர். (Falcon Unigreen Sdn. Bhd.) வசமும் மற்றொரு நிலப்பட்டா (லோட் 147- 54 ஏக்கர்) Chai Lang Fah என்பவரிடமும் மேலும் ஒரு நிலப்பட்டா (லோட் 153 – 156 ஏக்கர்) டங்காபெய் சென்.பெர். (Danga Bay Sdn. Bhd) நிறுவனத்திற்கு சொந்தமாகவும் உள்ளது.
கடந்த 60 ஆண்டு காலமாக , குறிப்பாக, இன்றுவரை டங்காபெய் சென்.பெர். மற்றும் பால்கோன் யுனிகிரின் சென்.பெர். வசமிருக்கும் நிலம் தொடர்பாக உரிமையாளரோ அல்லது தோ ஆ பூனின் பிரதிநிதியான லோவ் சுய் ஹேங்-கோ இம்மக்களைச் சந்தித்ததில்லை.
கடந்த ஆண்டு, பிப்ரவரி மாதம் 14-ம் நாள், லோட் 153 நிலம் டங்காபெய் சென்.பெர். நிறுவனத்திற்கும் நவம்பர் 8 மற்றும் 24-ம் தேதிகளில், மேலும் 2 பகுதி நிலம் பால்கோன் யுனிகிரின் சென்.பெர். நிறுவனத்திற்கும் விற்கப்பட்டுள்ளது. (பால்கோன் யுனிகிரின், டங்காபெய் நிறுவனத்துடன் தொடர்புடையது என அறியப்படுகிறது.)
கடந்த 08.09.2011 அன்று, கெல்வின் காங் வழக்கறிஞர் நிறுவனத்திலிருந்து, (Tea, Kelvin Kang & Co) PTD 85545 நிலப்பகுதியில் வசிக்கும் (தற்போது பால்கோன் யுனிகிரின் நிறுவனத்திற்குச் சொந்தமானது) குடியிருப்பாளர்கள் அக்டோபர் 31, 2011-க்குள் வெளியேற வேண்டும் என்று அறிவிப்புக் கடிதம் வழங்கப்பட்டது. அந்த அறிவிப்பு கடிதத்தில் நில உரிமையாளரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இதைத் தொடர்ந்து, கிராமத்து மக்கள் கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினர், ஹஜி ஒஸ்மான் சப்பியானிடம் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளை முறையிட்டனர்.
அக்டோபர் 9, 2011ல் கம்போங் செமாங்காட் மண்டபத்தில் ஒன்றுகூடிய சுமார் 500 குடியிருப்பாளர்கள், கிராமத்துத் தலைவர் திரு கே.கே.கிருஷ்ணன் தலைமையில், 6 கோரிக்கைகளை முன்வைத்து, மாநில மந்திரி பெசார் அப்துல் கானி ஒத்மானுக்கு மனு ஒன்றினைக் கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினரிடம் ஒப்படைத்தனர். அம்மனுவில் முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கைகள்:-
1. ஒரு குடும்பத்திற்குக் குறைந்தது ரிம 30,000.00 இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும்.
2. மேம்பாட்டு நிறுவனம் இக்கிராமத்து மக்கள் வாங்கக்கூடிய வகையில், ரிம 50,000.00க்கு மேற்போகாத நடுத்தர வீடுகளைக் கட்டிக்கொடுக்க வேண்டும்.
3. அந்த வீடுகளுக்கு ரிம 10,000.00 கழிவு கொடுத்தால், ஏழை மக்கள் வாங்குவதற்கு வழி வகுக்கும்.
4. உடைக்கப்படும் வீட்டின் உபரிகளைக் கிராமத்து மக்கள் எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
5. வீடு இடமாற்றத்திற்கு போக்குவரத்து செலவாக ரிம 1,000.00 வழங்கப்பட வேண்டும்.
6. புதிய வீடுகளில் குடிபுக அனுமதி கிடைக்கும் வரை, தற்காலிக வீடுகளை ஏற்படுத்தித் தர வேண்டும். இல்லையேல், மாதாந்திர வாடகையாக ரிம 400.00 வழங்கவேண்டும்.
கொடுக்கப்பட்ட மனுவிற்கு இதுவரை மந்திரி பெசாரிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை. எனவே, கிராமவாசிகள் கூடி ‘கம்போங் செமாங்காட் மக்கள் நடவடிக்கைக் குழு’ ஒன்றை திரு வோங் யோங் போவ் தலைமையில் அமைத்தனர். இக்குழுவினர், அக்டோபர் 8, 2012-ல் டங்காபெய் சென்.பெர். (Danga Bay Sdn.Bhd.) நிறுவனத்திடம் 7 கோரிக்கைகள் அடங்கிய மனுவை கையளித்தனர். அக்கோரிக்கைகள் பின்வருமாறு:-
1. ஒரு குடும்பத்திற்கு இழப்பீடாக ரிம 30,000.00 வழங்க வேண்டும்.
2. தற்காலிக இல்லம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
3. வீடு மாற்றத்திற்கான போக்குவரத்து செலவை கொடுக்க வேண்டும்.
4. வீடு மாறுவதற்கு நியாயமான கால அவகாசம் வழங்க வேண்டும்.
5. தொழில் புரிபவர்கள், முறையான இடத்திற்குத் தங்கள் தொழிலை மாற்றுவதற்கு சிறப்பு அவகாசம் வழங்க வேண்டும்.
6. அதிகார மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுப்பதை ஒத்திவைக்க வேண்டும்.
7. மலிவு விலை வீடு அல்லது குடியிறுப்பாளர்கள் வாங்கும் தகுதிக்குட்பட்ட வீடுகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.
இம்மனுவிற்கும் மேம்பாட்டாளர்களிடமிருந்து குடியிருப்பாளர்கள் எந்த பதிலையும் இதுவரை பெறவில்லை.
இதற்கிடையே, தே கெல்வின் காங் வழக்கறிஞர் நிறுவனத்திடமிருந்து, இரண்டாவது அறிவிப்பு கடிதத்தை இவர்கள் பெற்றனர். இம்முறை, PTD 85545 மற்றும் லோட் 153 பகுதிகளைச் சுத்தப்படுத்தும் பணிகள் அக்டோபர் 31, 2012-ல் தொடங்கப்படவுள்ளதால், குடியிருப்பாளர்கள் அதற்குள் வீடுகளைக் காலி செய்ய வேண்டும். இல்லையேல் அதனால் ஏற்படும் சேதங்களுக்கு தாங்கள் பொறுப்பல்ல என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதிலும், நில உரிமையாளர் யார் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.
இந்த அறிவிப்புக்கு முன்பும் பின்பும் அதிகமான குடும்பங்கள் சிறிய அளவிலான இழப்பீட்டுத் தொகையை வாங்கிக் கொண்டு வெளியேறிவிட்டனர். சில குடும்பங்கள் அச்சுறுத்தல் காரணமாக எந்த இழப்பீடும் பெறாமலேயே வெளியேறிவிட்டனர்.
தற்போது ஏறக்குறைய 180 குடும்பங்கள் மட்டுமே இங்கு வசிக்கின்றனர். தொடர்ந்து மேம்பாட்டு நிறுவனத்தின் கையாட்கள் அத்துமீறி குடியிருப்பாளர்கள் நிலத்தில் நுழைவது, பழத்தோட்டத்தை புல்டோசர் கொண்டு நாசமாக்குவது, வேலிகளை உடைத்து தள்ளுவது மற்றும் நீர் குழாய்களை துண்டிப்பது என கிராம மக்களுக்கு பிரச்னைகளைக் கொடுத்து வருகின்றனர். இதனை எதிர்த்து கேட்கும் குடியிருப்பாளர்கள் குண்டர்களைக் கொண்டு மிரட்டப்படுகின்றனர். இப்பிரச்னையைப் பலமுறை கெம்பாஸ் காவல் நிலையத்தில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த விசயத்தில் தாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது எனக் காவல்துறையினர் கூறினர்.
நவம்பர் 3ம் தேதி, மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) நூசாஜெயா கிளைத் தலைவர் மோகன் மற்றும் பாஸ் பூலாய் இளைஞர் பிரிவு தலைவர் சுஹாய்ஜான் இருவரும் மக்களுடன் சந்திப்பு கூட்டம் நடத்தினர். அக்கூட்டத்தில், மேம்பாட்டு நிறுவனத்திற்கு எதிராக அமைதி பேரணி ஒன்றினை, நவம்பர் 11, 2012 (ஞாயிறு) காலை 10 மணிக்கு கம்போங் செமாங்காட்டில் நடத்த தீர்மானித்தனர்.
இதனையடுத்து, கெம்பாஸ் வட்டாரப் பெங்குலு சலீம் நவம்பர் 9, 2012 இல் மக்களுடன் அவசர கூட்டம் ஒன்றினை நடத்தினார். அக்கூட்டத்தில் அவர் மேம்பாட்டாளர்கள் ரிம 9,000.00 வரை நஷ்ட ஈடு கொடுக்க முன்வந்துள்ளதாக கூறியுள்ளார். அத்தொகையை ஏற்க மக்கள் மறுத்துவிட்டனர்.
குறிப்பிட்ட நவம்பர் 11, 2012-ல் கம்போங் செமாங்காட் சமூக மண்டபத்தின் முன்புறம் கிராமத்து மக்கள் சுமார் 150 பேர் கூடி, எதிர்புப் பேரணியை நடத்தினர். இப்பேரணிக்கு பொது அமைப்புகள் மற்றும் எதிர்கட்சியைச் சார்ந்த அரசியல் தலைவர்கள் ஆதரவு வழங்கினர்.
மறுநாள், நவம்பர் 12 கிராமத்து மக்களுக்கும் மேம்பாட்டாளர்களின் குண்டர் கும்பலுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, கெம்பாஸ் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்திருந்தனர். மேம்பாட்டாளர்களின் கையாட்களில் சிலர் அடையாள அட்டையின்றி இருந்ததைக் காவல்துறையினர் பரிசோதனையின் போது தெரிந்துகொண்டனர். ஆனால், அவர்களின் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், காவல்துறை அதிகாரிகள் வேலைகளை நிறுத்த உத்தரவிட்டும், அவர்கள் தொடர்ந்து வேலையில் ஈடுபட்டனர். இறுதியில், கிராமத்து மக்கள் ஆத்திரம் கொண்டு குண்டர்களைத் தாக்க முற்பட்டபோதுதான், அவர்கள் வேலையை நிறுத்தினர்.
இதற்கிடையே, நவம்பர் 18-ல் , மலேசிய சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.அருட்செல்வன் கிராமத்து மக்களின் அழைப்பை ஏற்று, மக்களுடன் கலந்துரையாடல் ஒன்றினை நடத்தினார். கிராமத்து மக்களை நேரிடையாக டங்காபெய் நிறுவனத்தை அணுகி, தங்கள் உரிமைக்காகப் போராடுமாறு ஆலோசனை கூறினார். குடியிருப்பாளர்கள் அவரிடம் பல கேள்விகளைக் கேட்டு விளக்கம் பெற்றனர்.
22.11.2012 –அன்று இக்குண்டர் கும்பல் மீண்டும் பொது நீர் குழாயை உடைத்தது. இதனைக் கேட்கச் சென்ற 6 குடியிருப்பாளர்களைத் தாக்கி காயப்படுத்தினர். இவர்களில் 4 பேர் முதியவர்கள், ஒருவர் பெண். சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், காயப்பட்ட 6 குடியிருப்பாளர்கள் உட்பட 15 பேரை கைது செய்தனர். காயம்பட்ட குடியிருப்பாளர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பிறகு, இவர்கள் மீண்டும் இம்பியான் இமாஸ்-ல் உள்ள , ஸ்கூடாய் வட்டார தலைமை காவல்நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். அங்கு மூவருக்கு கைவிலங்கிடப்பட்டது.
காவல்துறையினர் குற்றம் செய்தவர்களை விடுவித்து விட்டு, குடியிருப்பாளர்களை இவ்வாறு நடத்தியது காவல்துறையினரின் பொறுப்பற்றத் தன்மையைக் காட்டுகிறது. பொது அமைப்புகள் கொடுத்த அழுத்தத்தினால், இரவு மணி 7-க்கு இவர்கள் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வுக்குப் பிறகு, டங்கா பெய் நிறுவனத்தின் வழக்கறிஞர் கிராமத்து மக்களில் இருவரை சந்திக்க அழைப்பு விடுத்தார். கடந்த 28.11.2012-ல், பாஸ் கட்சியைச் சார்ந்த, சுஹாய்ஜான் மற்றும் குடியிருப்பாளர்களில் 6 பேர் வழக்கறிஞரை சந்தித்தனர். சந்திப்பின் போது, குடியிருப்பாளர்களின் கோரிக்கைகளைக் கேட்டுவிட்டு, அவற்றை கொடுப்பது மிகவும் சிரமம் என்று கூறியுள்ளார். மீண்டும் அடுத்த சந்திப்பிற்கு அழைப்பு கொடுப்பதாகக் கூறி அனுப்பிவிட்டார்.
இதற்கிடையில், PTD 85545 நிலத்தில், அடையாளம் தெரியாதவர்களால் பெரிய அளவில் மண் திருடப்பட்டு வந்திருக்கிறது. குடியிறுப்பாளர்கள் பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டதன் விளைவாக மண் திருடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது தனியார் நிலமாக இருந்தாலும், இந்த மக்கள் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். ஆதாய நோக்கத்திற்காக இதனை வாங்கியுள்ள மேம்பாட்டு நிறுவனம், இம்மக்களை முறையாக சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த முன்வர வேண்டும். இவர்களுக்கு ஏற்புடைய இழப்பீடு, வாழ்வதற்கு வசதியான இடம் போன்றவற்றை ஏற்படுத்தித் தரவேண்டியது இவர்களின் கடமை.
அதை விடுத்து, இவர்களை அச்சுறுத்தி, நியாயமற்ற முறையில் வெளியேற்ற நினைப்பது பொறுப்பற்ற செயலாகும். குத்தகையாளர்கள் அடியாட்களோடு கம்பத்துக்குள் நுழைவது, மண் திருட்டு போன்றவற்றை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். சட்டத்திற்குப் புறம்பான செயலில் ஈடுபடுபவற்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
கம்போங் செமாங்காட் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை நன்கு அறிந்துள்ள கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினர், கிராமத்து மக்கள் இந்த அளவுக்குப் பாதிப்புக்குள்ளாகியும் அவர்களைச் சந்திக்க வரவில்லை. இது வாக்கு அளித்த மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இவர் உடனடியாக மாநில மந்திரி புசாருடன் கலந்துரையாடி இம்மக்களின் பிரச்சனை நிரந்தர தீர்வு காண உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை மேம்பாட்டாளர்கள் இக்கிராமத்தைச் சுத்தப்படுத்தும் வேலைகளை நிறுத்த ஆணையிட வேண்டும். உழைக்கும் வர்க்கமாகிய இவர்களின் உரிமை நிலைநாட்ட அனைத்து தரப்பு மக்களும் இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
-ஜொகூர் பாரு செம்பருத்தி தோழர்கள்