24 மில்லியன் ரிங்கிட் மோதிரம் இருந்ததை சுங்கத் துறை உறுதி செய்கிறது

பிரதமரது துணைவியார் ரோஸ்மா மான்சோர் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள 24 மில்லியன் ரிங்கிட் மோதிரம் இருந்ததை அரச மலேசியச் சுங்கத் துறை உறுதி செய்துள்ளது.

என்றாலும் இந்த நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட அந்த மோதிரம் வாங்கப்படவில்லை என பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி  அப்துல் அஜிஸ் விளக்கினார்.

அவர் சிகாம்புட் எம்பி லிம்லிப் எங்-கின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக வழங்கிய பதிலில் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அந்த விஷயத்தை அரச சுங்கத் துறையிடம் கொண்டு சென்றது.  அந்த மோதிரம் வாங்கப்படவில்லை என்பதை சுங்கத் துறை உறுதி செய்துள்ளது.”

“சில நாட்களுக்குப் பின்னர் அந்த மோதிரம் அதற்கு உரிமையாளரான நிறுவனத்துக்கு திருப்பி அனுப்பபட்டு விட்டது,” என்றார் அவர்.

24,458,400 ரிங்கிட் மதிப்புள்ள வைர மோதிரம் ஒன்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வழியாக கொண்டு வரப்பட்டது என கடந்த ஜுலை மாதம் பிகேஆர் மத்தியக் குழு உறுப்பினரான பத்ருல் ஹிஷாம் ஷாஹ்ரின் கூறியிருந்தார்.

அவர் அதற்கு ஆதாரமாக சுங்கத் துறை தகவல் பாரம் ஒன்றையும் காட்டினார். அந்த மோதிரம் நியூயார்க்கில் உள்ள ஜேக்கப் அண்ட் கோ என்னும் ஆபரண நிறுவனம் வழியாக கொள்முதல் செய்யப்பட்டு மலேசியாவுக்குள் ஜெரெமி பே சின் தீ என்பவரால் கொண்டு வரப்பட்டது.

அந்த சுங்கத் துறை பாரத்தில் பெற்றுக் கொள்வோருக்கான பத்தியில் ரோஸ்மாவின் பெயர் காணப்பட்டதாக அவர் கூறிக் கொண்டார். அந்த விலை உயர்ந்த மோதிரத்தை பிரதமரின் துணைவியார் வாங்கியிருப்பதற்கு அது சான்று எனவும் அவர் கூறிக் கொண்டார்.

ரோஸ்மா அந்தக் குற்றச்சாட்டை மறுத்ததுடன் தமக்கு எதிராக சுமத்தப்படும் “அவதூறுகளில்” அதுவும் ஒன்று என்றும் சொன்னார்.

“இதில் ஒன்றும் வேடிக்கை இல்லை. இது அவதூறு. நான் எதனை அனுபவிக்கவில்லை ? நான் எல்லாவற்றையும் அனுபவித்துள்ளேன்,” என்றும் அவர் கூறினார்.

அதனை அவர் மறுத்துள்ள போதிலும் நஜிப்பின் எதிரிகள் அந்த விஷயத்தை அரசியல் சொற்பொழிவுகளில் பெரிதுபடுத்தி வருகின்றனர்.