-ஜே.சிம்மாதிரி, பாகாங் மாநில ஜ.செ.க துணைத் தலைவர், டிசம்பர் 10, 2012.
இந்திய சமூகத்திற்கு அரசுத்துறையில் 15% தேவை என நகர்ப்புற நல்வாழ்வு துறை துணை அமைச்சர் சரவணன் கூறுகிறார். நல்லது வரவேற்போம்.
ஓராண்டுக்கு முன் “எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்; அரசுத் துறையில் 12% இந்தியர்களுக்கு வாய்ப்பு தருகிறோம்” என மஇகா தலைவர் ஜ.பழனிவேல் கூறியிருந்தார்.
பழனிவேல் அரைத்த அதே மாவை இப்போது துணை அமைச்சர் சரவணன் அரைக்கிறார். “15% அரசுத் துறை வாய்ப்புக்கள் இந்தியர்களுக்கு தேவை” என்கிறார் சரவணன். மற்றுமொரு துணை அமைச்சர் தேவமணி சும்மா இருப்பாரா? நாளையே ஒரு தாவு தாவி இந்தியர்களுக்கு 17% என்பார்.
கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கேமரன் மலை மாவட்ட பணிமனையில் ஓர் இந்திய அதிகாரியோ அல்லது ஊழியரோ இருந்தது கிடையாது. நாங்களும் கத்திக் கத்தி தொண்டையும் வறண்டு விட்டது. கேமரன் மலை குறைந்தது 30% இந்தியர்கள் வசிக்கும் இடம். ஆனால், இங்குள்ள மாவட்ட பணிமனையில் உள்ள நூறு ஊழியர்களில் மருந்துக்கு கூட ஓர் இந்தியர் கிடையாது.சொல்லிச் சொல்லி கத்திக் கத்தி எங்களுக்கும் அலுத்துவிட்டது.
இந்த இலட்சணத்தில் பழனிவேல் வந்தார். ஓராண்டுக்குமுன் அவர் இப்படி காதுகுத்தினார்; “அரசுத் துறையில் இந்தியர்களுக்கு 12% வேண்டும் என போராட்டப் போகிறோம்” என்றார்.
இப்போது சரவணன், ஒரு படி மேலேபோய் இந்தியர்களுக்கு அரசுத் துறையில் 20% கிடைப்பதே நியாயம் எனக் கூறி காதில் மாலையே போடப்போகிறார்.
தெனாலி ராமன் உயிரோடு இருப்பானேயானால் இவர்களோடு போட்டி போட இயலாமல் தற்கொலை செய்து கொள்வான்.