சுற்றுச்சூழல், மனித உரிமைப் பிரச்னைகள் மீது பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக ஹிம்புனான் ஹிஜாவ், முரும்- பாராம் சமூகங்களுக்கு சுவாராமின் மனித உரிமை விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
சுவாராம் விருது பெறுவோரைத் தேர்ந்தெடுக்கும் குழுவின் தலைவரும் ஜிஎம்ஐ என்ற இசா எதிர்ப்பு அமைப்பைச் சேர்ந்தவருமான நோர்லைலா அதனை அறிவித்தார்.
இந்த முறை ஒர் அமைப்புக்குப் பதில் இரு வெற்றியாளர்களைத் தேர்வு செய்ய தமது குழு முடிவு செய்ததாகவும் அவர் சொன்னார். காரணம் இரண்டு அமைப்புக்களும் “கீழ் நிலை மக்களுக்கு வலிமையூட்டவும் கற்றுக் கொடுக்கவும் தங்கள் போராட்டத்தை அயராமல் தொடர்ந்துள்ளன” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
கோலாலம்பூர், சிலாங்கூர் சீனர் அசெம்பிளி மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்வின் போது சுவாராம் இயக்குநர் குவா கியா சூங் அந்த விருதை வழங்கினார்.
Undi Malaysia என்ற தேர்தல் சீர்திருத்த விழிப்புணர்வு அமைப்பும் Solidariti Mahasiswa Malaysia என்ற மாணவர் போராட்ட அமைப்பும் அந்த விருதுக்கு முன்மொழியப்பட்ட மற்ற அமைப்புக்களாகும்.