உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் போலீஸ் பணிகளில் குறுக்கிடுவார் என்று குற்றம் சுமத்திய முன்னாள் போலீஸ் படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜிபி) மூசா ஹசன், அமைச்சின் தலைமைச் செயலாளர் அப்துல் ரகிம் முகம்மட் ரட்ஸியும் அதேபோன்று குறுக்கீடு செய்வது உண்டு என்றார்.
அப்துல் ரகிமைப் பெயர் குறிப்பிடாமலேயே, அமைச்சின் தலைமைச் செயலாளர் குறிப்பிட்ட சில அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவிடுவார் என்றும் இதனால் போலீஸ் படைக்குள் யாருடைய உத்தரவைப் பின்பற்றுவது என்ற குழப்பம் உருவாவது உண்டு என்றும் கூறினார்.
“தலைமைச் செயலாளர் போலீஸ் அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவு பிறப்பித்து அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமக்குத் தெரிவிக்க வேண்டும் என்பார்.
“அதிகாரிகள் குழப்பமடைந்து என்னிடம் வருவார்கள்”. பெட்டாலிங் ஜெயாவில் ஒரு தங்குவிடுதியில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் மூசா இவ்வாறு தெரிவித்தார். அக்கூட்டத்துக்கு மைவாட்ச் (MyWatch) என்னும் என்ஜிஓ ஏற்பாடு செய்திருந்தது. மூசா அந்த என்ஜிஓ-வின் புரவலர் என்பது குறிப்பிடத்தக்கது.
எந்தத் தலைமைச் செயலாளரைக் குறிப்பிடுகிறீர்கள் என்ற வினவலுக்கு “நடப்புத் தலைமைச் செயலாளர்தான்”, என்றார்.
கடந்த மாதம் மூசா, தாம் ஐஜிபி ஆக இருந்தபோது, அமைச்சர் ஹிஷாமுடின் போலீஸ் விவகாரங்களில் தலையிடுவார் என்றும் இளநிலை போலீஸ் அதிகாரிகளுக்கும் போலீஸ் மாவட்டத் தலைவருக்கும் அவர் கட்டளை பிறப்பித்தது உண்டு என்றும் கூறியிருந்தார்.