பிபிபி: 300,000 நாடற்ற இந்தியர்கள் இருப்பதை நிரூபியுங்கள்

இந்த நாட்டில் 300,000 நாடற்ற இந்தியர்கள் இருப்பதாக தாம் கூறிகொள்வதை பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன் மெய்பிக்க வேண்டும் என பிபிபி என்ற மக்கள் முற்போக்குக் கட்சி இன்று கேட்டுக் கொண்டுள்ளது.

“300,000 நாடற்ற இந்தியர்கள் இருப்பதை மெய்பிக்குமாறு நாங்கள் சுரேந்திரனிடம் கூறியுள்ளோம். கற்பனையாக எந்த எண்ணிக்கையையும் சொல்ல வேண்டாம். எங்களுக்கு ஆதாரத்தைக் காட்டுங்கள்.”

“உங்கள் சொந்த அரசியல் ஆதாயத்துக்காக ஏழை மக்களை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டே இருக்க வேண்டாம்,” என பிபிபி கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் ஏ சந்திரகுமணன் இன்று விடுத்த ஒர் அறிக்கையில் கூறினார்.

இந்த நாட்டில் நாடற்ற இந்தியர் எண்ணிக்கை மிகைப்படுத்தப்படுவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருப்பது பொய் என சுரேந்திரன் விடுத்த அறிக்கைக்கு சந்திரகுமணன் பதில் அளித்தார்.

சுரேந்திரன் கூறும் எண்ணிக்கை உண்மையானதாக இருந்தால் அவர்களது பெயர்களை அரசாங்கத்திடம் கொடுக்க வேண்டும். அதன் வழி அவர்களுடைய குடியுரிமை விவகாரம் தீர்க்கப்படும் என அவர் சொன்னார்.

“பழைய இசைத் தட்டைப் போல திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்காமல் அந்தப் பிரச்னையை முறையாக தீர்ப்பதற்கு நாடற்ற 300,000 இந்தியர்களுடைய பெயர்களை எங்களிடம் கொடுங்கள். இல்லை என்றால் வாக்குறுதி நிறைவேற்றப்படாத இன்னொரு கம்போங் புவா பாலா விவகாரம் போலாகி விடும்,” என்றார் அவர்.

கம்போங் புவா பாலா பக்காத்தான் ராக்யாட் வழி நடத்தும் பினாங்கில் இருந்த ஒரு கிராமம் ஆகும். அதில் வாழும் மக்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள் என வாக்குறுதி அளிக்கப்பட்ட போதிலும் மேம்பாட்டுக்கு வழி விடுவதற்காக அந்தக் கிராமம் உடைக்கப்பட்டது.

நாடற்ற இந்தியர் பிரச்னையை 30 நாட்களில் தீர்த்து விடுவதாக பிகேஆர் கூறிக் கொள்வதையும் சந்திரகுமணன் சாடினார்.

அந்த 300,000 எண்ணிக்கை உண்மையானதாக இருந்தால் குறிப்பிடப்பட்ட அந்த கால வரம்புக்குள் நாள் ஒன்றுக்கு 10,000 மைகார்டுகளை வெளியிட வேண்டியிருக்கும் என்றார் அவர்.

“பிகேஆர்-கட்சிக்கும் அதன் (மூத்த தலைவர்) அன்வார் இப்ராஹிமுக்கும் நான் வழங்கும் அறிவுரை இது தான்: இந்தியர்களுக்கு நீங்கள் உண்மையில் உதவி செய்ய விரும்பினால் அவர்களுடைய உணர்வுகளுடனும் அவர்களுடைய பிரச்னைகளுடனும் தொடர்ந்து விளையாட வேண்டாம்,” என அவர் மேலும் சொன்னார்.

TAGS: