அன்வார் இப்ராஹிமை கொள்கை இல்லாத தலைவர் என்றும் தாம் அந்த பிகேஆர் மூத்த தலைவரை வெறுப்பதாகவும் ‘மர்ம சாட்சி’ என வருணிக்கப்பட்ட முகமட் நஜ்வான் அலி இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் கூறினார்.
சைபுலின் அரசியல் விசுவாசம் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். பல்கலைக்கழகத்தில் தம்முடன் ஒன்றாகப் படித்தவரான சைபுல் உறுதியான பாரிசான் நேசனல் ஆதரவாளர் என்றும் அவர் பல பிஎன் தலைவர்களுடன் படங்கள் எடுத்துள்ளார் என்றும் நஜ்வான் சொன்னார்.
அது சைபுலின் பிரண்ட்ஸ்டர் பக்கத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சைபுல் விளம்பரத்தையும் கவனத்தையும் அதிகம் நாடும் மனிதர் என சைபுலுடன் தெனாகா நேசனல் பல்கலைக்கழகத்தில் எந்திரப் பொறியியல் மாணவரான நஜ்வான் கூறினார்.
“அவர் (சைபுல்) பல்கலைக்கழக மாணவர் தலைமைத்துவ மன்றத்தின் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார்.
“அவர் மின்சார பொறியியல் துறையில் படித்தார். நான் எந்திரத்துறையில்.”
2008ம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதி வாக்கில் தாம் சைபுலுடன் பக்திசிஸ்வா திட்டத்தில் இணைந்து பணியாற்றியதாகவும் நஜ்வான் தெரிவித்தார்.
“அவருடன் நான் உரையாடிய போது அவர் பிஎன் ஆதரவாளர் என்பது எனக்குத் தெரிந்தது. அவர் அன்வார் இப்ராஹிமை வெறுத்தார். கொள்கையற்ற தலைவர் என்ற அடிக்குறிப்புடன் அவர் அன்வார் படத்தையும் கூட சேர்த்துள்ளார்.”
“தாம் அன்வாரைத் தலைவராகக் கருதியதில்லை என்றும் ஆளும் கட்சியை நாம் ஆதரிக்க வேண்டும் என்றும் சைபுல் என்னிடம் சொன்னார்,” என நஜ்வான் பிரதிவாதித் தரப்பு வழக்குரைஞர் சங்கர நாயரின் கேள்விக்குப் பதில் அளித்த போது கூறினார்.
நஜ்வான் சாட்சியம், தாம் அன்வாரை தலைவராகப் போற்றியதாக முக்கிய அரசு தரப்புச் சாட்சியான சைபுல் தமது சாட்சியத்தின் போது கூறியதற்கு முரணாக உள்ளது.
நஜ்வான் பிரதிவாதித் தரப்பின் ஆறாவது சாட்சி ஆவார்.