ஒய்வு பெற்ற இரண்டு முதுநிலை போலீஸ் அதிகாரிகளுக்கு இடையிலான- முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான், முன்னாள் வர்த்தக் குற்றப் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் ராம்லி யூசோப்- வாக்குவாதம் முற்றுகிறது.
அதன் தொடர்ச்சியாக, ராம்லி தாம் சேவையில் இருந்த போது ‘பெருவாரியான சொத்துக்களை’ எப்படிச் சேர்த்தோம் என்பதை விளக்க வேண்டும் என மூசா இன்று கேட்டுக் கொண்டார்.
“அவர் பதில் சொல்ல வேண்டும். அவர் போலீஸ் படையில் இருந்த போது அவர் எப்படி அவ்வளவு பெருவாரியான சொத்துக்களைச் சேர்க்க முடியும். அவர் பதில் அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது,” என மூசா இன்று நிருபர்கள் சந்திப்பில் கூறினார்.
மூசா பிக்டாக் என்னும் புனை பெயரைக் கொண்ட அம்னோ ஆதரவு வலைப்பதிவாளர் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்தார்.
2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ம் தேதி சமர்பித்த பிரகடனம் ஒன்றில் மொத்தம் 8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 52 சொத்துக்களை பட்டியலிட்டுள்ளதாக பிக்டாக் தமது வலைப்பதிவில் கூறிக் கொண்டுள்ளார்.
ஜோகூரைச் சேர்ந்த குண்டர் கும்பல் தலைவர் எனக் கூறப்படும் கோ செங் போ அல்லது தெங்கு கோ-வைப் பாதுகாப்பதற்கு மூசா தமது அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தியதாக ராம்லி ஏற்கனவே கூறிக் கொண்டிருந்தார்.