தமக்குப் பின் போலீஸ் படைத் தலைவர் பதவி ஏற்ற இஸ்மாயில் ஒமார் மீதும் மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய (எம்ஏசிசி) ஆலோசனை வாரியத்தின் முன்னாள் உறுப்பினர் ரோபர்ட் பாங்கின்மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தும் முன்னாள் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் மூசா ஹசன் அக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் போலீசிலும் எம்ஏசிசி-இலும் புகார் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இன்று ஓர் அறிக்கையில் அதை வலியுறுத்திய பிகேஆர் தொடர்புடைய என்ஜிஓவான ஜிங்கா 13-இன் தலைமை ஒருங்கிணைப்பாளர் பாரிஸ் மூசா, அக்குற்றச்சாட்டுகள் பாங்கும் இஸ்மாயிலும் “கடும் குற்றங்கள்” புரிந்திருப்பதைச் சுட்டிக்காட்டுவதாகக் கூறினார்.
“முன்னாள் ஐஜிபியும் ஒரு பொறுப்புள்ள குடிமகனுமான மூசா சட்டங்களை நன்கு அறிந்து வைத்திருப்பார். பாங்(இடம்) இஸ்மாயில் ஆகியோர் இழைத்துள்ள குற்றங்களைப் புகார் செய்யாதிருந்தால் மூசாதான் குறைகூறப்படுவார்.
“அவரிடம் போதுமான தகவல்கள் இருக்கின்றன. அவற்றை வைத்து பொருத்தமான நடவடிக்கை மேற்கொள்ளலாம். அதுவும், பல மில்லியன் ரிங்கிட் பொதுமக்கள் பணம் சம்பந்தப்பட்ட ஒரு விவகாரமாகவும் இருக்கிறது”, என்று பாரிஸ் குறிப்பிட்டார்.
“இதை அம்பலப்படுத்திய மூசாவின் துணிச்சலுக்கு ஜிங்கா 13 ஆதரவு தெரிவிக்கிறது. ஆனால், இந்தக் கடுமையான விவகாரம் குறித்து அவர் புகார் செய்யாமலிருப்பதுதான் ஆச்சரியமளிக்கிறது”.
நேற்றைய செய்தியாளர் கூட்டத்தில் அக்குற்றச்சாட்டை விவரித்த மூசா, ஒரு நிறுவனத்தால் தொடங்கப்பட்டு முடிவடையாதிருந்த போலீசின் தொடர்புமுறைக்கான குத்தகைத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறு முதுநிலை போலீஸ் அதிகாரி ஒருவரை பாங் மிரட்டினார் என்று கூறினார்.
அதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்த போலீஸ் அதிகாரியை இஸ்மாயில் இடமாற்றம் செய்ததாகவும் மூசா கூறிக்கொண்டார்.
அது போலீசின் ஒப்புமை(அனலோக்) தொடர்புமுறையை இலக்கவியல் தொடர்புமுறையாக தரம் உயர்த்துவதற்கான ஒரு குத்தகைத் திட்டம் எனக் குறிப்பிட்ட பாரிஸ், அதன்பின் அது ஆசியாசோப்ட் மலேசியா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது என்றார்.
“அந்நிறுவனத்தில் இரண்டு பங்குதாரர்கள். பி சிஸ்டம் சென். பெர்ஹாட் ஒன்று. மற்றது ஆசியாசோப்ட் பிஎல்சி. ஆசியாசோப்ட் சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனம். ஆனால், அதைக் கட்டுப்படுத்தும் ஆசியாசோப்ட் குளோபல் பிஎல்சி இஸ்ரேலில் உள்ளது”, என்றவவர் சொன்னார்.