முதலில் சீர்திருத்தங்கள், அடுத்து தேர்தல்கள் இல்லை என்றால் தாக்கத்தை எதிர்கொள்ளுங்கள் என பெர்சே எச்சரிக்கை

திடீர் தேர்தல்களை நடத்துவது பற்றிச் சிந்திப்பதற்கு முன்னர் தேர்தல் சீர்திருத்தம் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு தனது பணியை முடிப்பதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு தூய்மையான சுதந்திரமான தேர்தல்களுக்குப் போராடும் பெர்சே 2.0 அமைப்பு கூறுகிறது.

அரசாங்கம் “நாடாளுமன்ற அமைப்புக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என அந்த அமைப்பின் வழிகாட்டிக் குழு உறுப்பினரான வோங் சின் ஹுவாட் கூறினார். அவர் நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் பேசினார்.

இதில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் தோற்றமும் பெருமையும் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

நாடாளுமன்றத் தேர்வுக் குழு தனது பணியை நிறைவு செய்வதற்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் வாக்காளர்கள் பிஎன் -னுக்கு எதிராக வாக்களித்து பதிலடி கொடுப்பர் என தமக்கு உறுதியாகத் தெரியும் என்றும் வோங் குறிப்பிட்டார்.

“நாம் பெர்சே 3.0ஐ காண இயலும் என நான் நினைக்கிறேன். பெரிய அளவிலான சுனாமியும் ஏற்படலாம்,” என்றார் அவர். 2008ம் ஆண்டு மார்ச் மாதம் நிகழ்ந்த தேர்தல் பெரிய திருப்புமுனையாக அமைந்து விட்டதையும் நாடாளுமன்றத்தில் முதன் முறையாக எதிர்க்கட்சிகள் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பிஎன்-னுக்குக் கிடைக்காமல் செய்து விட்டதையும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத் தேர்வுக் குழு தனது பணிகளை முடிப்பதில் அரசாங்கத்துக்கு உள்ள பொறுப்புக்களை பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் தட்டிக் கழிப்பதாக பெர்சே 2.0 வழி காட்டிக் குழுவில் இன்னொரு உறுப்பினரான மரியா சின் அப்துல்லா குற்றம் சாட்டினார்.

13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் சீர்திருத்தங்களை அமலாக்கலாம் எனக் கூறியதின் மூலம் நஸ்ரி, தேர்தல் முறை பொது மக்களுடைய நம்பிக்கையைப் பெற்றிருக்க வேண்டியதின் முக்கியத்துவத்தை ‘உணரத் தவறி விட்டதாக’ அவர் சொன்னார்.

பெர்சே 2.0ன் எட்டுக் கோரிக்கைகள் உட்பட நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் பரிந்துரைகள் அமலாக்கப்படும் வரையில் தேர்தலை  தள்ளிப் போடுவதாக நஜிப் வாக்குறுதி அளிக்க வேண்டும் என்றும் பெர்சே விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே நாடாளுமன்றத் தேர்வுக் குழு தனது பணியை முடிப்பதற்காக காத்திருக்காமல் தேர்தல் ஆணையம் நடப்புச் சட்டங்களின் கீழ் விசாரணைகளை நடத்தி சீர்திருத்தங்களை அமலாக்க வேண்டும் என அந்த நிருபர்கள் சந்திப்பில் உடன் இருந்த சுங்கை சிப்புட் எம்பி டாக்டர் டி ஜெயகுமார் கேட்டுக் கொண்டார்.

அதனைச் செய்வதற்கான அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இருப்பதாக அவர் சொன்னார்.