கிளந்தான்: ஊராட்சி மன்றங்கள் முஸ்லிம் அல்லாதாருக்கும் சம்மன் வழங்கலாம்

அநாகரீகமான நடத்தைக்காக முஸ்லிம் அல்லாதாருக்கும் சம்மன் (குற்றப்பதிவுகள்) வழங்கும் அதிகாரத்தை தனது துணைச் சட்டங்களின் கீழ் கோத்தா பாரு நகராட்சி மன்றம் பெற்றுள்ளது என கிளந்தான் ஆட்சி மன்ற உறுப்பினர் தாக்கியுடின் ஹசான் கூறுகிறார்.

கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் முஸ்லிம் அல்லாதாருக்கு இது போன்ற சம்மன்களை வழங்கியுள்ளதாக வீடமைப்பு, சுற்றுப்பயணம், கலை, பண்பாடு ஆகியவற்றுக்கு பொறுப்பான ஆட்சி மன்ற உறுப்பினரான அவர் சொன்னார்.

“ஏற்கனவே கேஎல்சிசி பூங்காவில் அநாகரீகமான நடத்தைக்காக முஸ்லிம் அல்லாத ஜோடி ஒன்றுக்கு கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் சம்மன் வழங்கியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.”

“பூங்காக்கள், பொழுதுபோக்கு பகுதிகள் சம்பந்தப்பட்ட துணைச் சட்டங்களை எல்லா ஊராட்சி மன்றங்களும் பெற்றுள்ளன. அந்தத் துணைச் சட்டம் கிளந்தானில்  மட்டும் இருக்கவில்லை. எல்லா ஊராட்சி மன்றங்களிலும் உள்ளது,” என தாக்கியுடின் மலேசியாகினி தொடர்பு கொண்ட போது கூறினார்.

அத்தகைய சம்மன்களை அங்கீகாரம் பெற்ற தரப்புக்கள் மட்டுமே வழங்க முடியும் என்றும் அவர் சொன்னார்.

நேற்று சில முக்கிய நாளேடுகள் முஸ்லிம் அல்லாதாருக்கு சம்மன்களை  வழங்குவதற்கு ஊராட்சி மன்றங்களுக்கு உள்ள அதிகாரம் பற்றி எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

அநாகரீகமான நடத்தைக்காக கோத்தாபாரு நகராட்சி மன்றம் முஸ்லிம் அல்லாத நால்வருக்கு கடந்த வாரம் சம்மன்களை வழங்கியது.

அந்த விவகாரம் நாளை ஆட்சி மன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்

இரவு நேரத்தில் நிறுத்தப்பட்டிருந்த தங்கள் வாகனத்திலிருந்து  சுல்தான் இஸ்மாயில் பெத்ரா விமான நிலையத்தில் இருந்த விமானங்களைப் பார்த்துக் கொண்டிருந்த இரண்டு ஆண்கள் ஒருவரை ஒருவர் முத்தமிட்டுக் கொண்டதாக கூறப்பட்டது தொடர்பில் சம்மன் வழங்கப்பட்டது முதலாவது சம்பவமாகும்.

இரண்டாவது சம்பவம் பதின்ம வயது ஜோடி ஒன்று சம்பந்தப்பட்டதாகும். அதில் பொதுப் பூங்கா ஒன்றில் தமது பெண் தோழிக்கு piggyback சவாரி கொடுத்ததற்காக ஆணுக்கு சம்மன் கொடுக்கப்பட்டது.

தனிநபர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பற்றிக் கருத்துரைக்க தாக்கியுடின் மறுத்து விட்டார். அந்த விவகாரம் மாநில ஆட்சி மன்றக் கூட்டத்தில் நாளை விவாதிக்கப்படலாம் என்று மட்டும் அவர் சொன்னார்.