ஜோகூர், பெங்கேராங் துணை மாவட்ட மக்களைப் பாதிக்கும் இரண்டு விவகாரங்களில் கருத்துக்கணிப்புகள் நடத்த நீதிமன்றம் ஆணையிட வேண்டும் என பெங்கேராங் என்ஜிஓ கூட்டமைப்பு மனு செய்துகொள்ளும்.
அவ்வட்டார மக்கள், பெட்ரோனாஸ் சுத்திகரிப்பு ஆலையும் பெட்ரோகெமிகல் ஒருங்கிணைப்பு மேம்பாட்டுத் திட்டமும்(ரப்பிட்) அங்கு அமைவதற்கும் சீன இடுகாடுகள் இடமாற்றம் செய்யப்படுவதற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.
2011-இல் உயர் நீதிமன்றம், அங்குள்ள ஒரு கிராமத்துக்கு பெயரிடுவது தொடர்பில் ஒரு கருத்துக்கணிப்பை நடத்த அந்தக் கிராம மக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது என்பதால் அதன் அடிப்படையில் என்ஜிஓவும் மனு செய்துகொள்ளும் என அதன் பொருளாளர் சுவா பெங் சியான் (இடம்) கூறினார்.
பெங்கேராங்கில் உள்ள ஒரு கிராமத்துக்கு கம்போங் டத்தோ ஹாஜி அப்துல் கனி ஒஸ்மான் எனப் பெயரிட்டபோது அதை எதிர்த்த கிராம மக்களில் ஒரு பகுதியினர், கம்போங் பாரு தெலுக் ரமுனியா என்ற அதன் முந்தைய பெயரே தொடர வேண்டும் என்று விரும்பினார்கள். விவகாரம் நீதிமன்றம் சென்றபோது உயர் நீதிமன்றம், அதன் தொடர்பில் கருத்துக்கணிப்பு நடத்துமாறு ஜோகூர் அரசுக்கு உத்தரவிட்டது.
கருத்துக்கணிப்பு இனிமேல்தான் நடக்க வேண்டும். அது கம்பத்துக்குப் புதிய பெயரா அல்லது பழைய பெயரா என்பதை முடிவு செய்யும்.
பாஸ் கட்சியிடம் சட்ட உதவி நாடப்படும்
அந்தச் சட்ட முன்மாதிரியை வைத்து பெங்கேராங்கில் ரப்பிட் திட்டத்தையும் சீனர்களின் இடுகாடுகள் இடமாற்றம் செய்யப்படுவதையும் எதிர்க்கும் குடியிருப்பாளர்கள் கருத்துக்கணிப்புக்கு அனுமதி கோரி விண்ணப்பம் செய்துகொள்வார்கள் என சுவா கூறினார்.
“உயர் நீதிமன்றத்தில் மனு செய்துகொள்வதற்கு பாஸ் கட்சியிடம் சட்ட உதவி அளிக்குமாறு கேட்போம்”. இன்று காலை கோலாலம்பூர். சிலாங்கூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சுவா பேசினார்.
அசெம்பிளி மண்டப தலைமை செயல் அதிகாரி டாங் ஆ சாயும் அதில் கலந்துகொண்டார். அவர் என்ஜிஓவின் நடவடிக்கைக்குத் தம் ஆதரவைத் தெரிவித்துக் கொண்டார்.
எந்தவொரு பெரிய திட்டத்துக்கும் அவ்வட்டார மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தால் அதன் தொடர்பில் இதேபோன்று கருத்துக்கணிப்பு நடத்தப்படுவதான் முறையாகும் என்று டான் கூறினார்.
சீன இடுகாடுகளைப் பாதுகாக்க முற்படாத பெங்கேராங் மசீச பிரதிநிதிகளையும் சுவா சாடினர்.
“ஆறு மில்லியன் சீனர்களைப் பிரதிநிதிப்பதாகக் கூறிக்கொள்ளும் மசீச-வைக் கேட்கிறேன்: “என்ன செய்தீர்கள்? எங்களுக்குப் பரிந்து பேசியது உண்டா?”, என்றவர் வினவினார்.
மசீச கோழைத்தனமாக செயல்படக்கூடாது. பெங்கேராங் குடியிருப்பாளர்களின் உரிமைகளுக்காக போராட வேண்டும் என்றவர் வலியுறுத்தினார்.