பினாங்கில் தாம் கலந்து கொள்ளும் அதிகாரத்துவ நிகழ்வு ஒன்றில் ஆங்கிலமும் மண்டரின் மொழியுமே பேசப்பட்டது எனக் கூறியுள்ள தகவல், பண்பாடு, தொடர்பு அமைச்சர் ராயிஸ் யாத்திமை பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் சாடியுள்ளார்.
ராயிஸ் “தமது தவறான கருத்துக்கள் மூலம் ஆபத்தான அறிக்கையை” வெளியிட்டுள்ளதாக அவர் சொன்னார்.
அம்னோவுக்கு சொந்தமான மலாய் மொழி நாளேடான உத்துசான் மலேசியாவைப் போன்று ராயிஸ் பொய் சொல்லக் கூடாது. அவர் தாம் கலந்து கொண்ட எந்த மாநில அரசாங்க நிகழ்வில் பாஹாசா மலேசியா ஒதுக்கப்பட்டது என்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் லிம் கேட்டுக் கொண்டார்.
“ராயிஸ் குறிப்பிடும் அதிகாரத்துவ நிகழ்வு, பினாங்கில் உள்ள ஹான் சியாங் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வு என நான் சந்தேகிக்கிறேன். செப்டம்பர் 29ம் தேதி நடந்த அதில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சார்பில் ராயிஸ் கலந்து கொண்டார்,” பினாங்கு முதலமைச்சர் விடுத்த அறிக்கை தெரிவித்தது.
“ஹான் சியாங் கல்லூரி தனியார் துறை நடத்தும் கல்லூரியாகும். அந்த நிகழ்வுக்கு ஹான் சியாங் ஏற்பாடு செய்திருந்தது. மாநில அரசாங்கம் அல்ல என்பதை நான் ராயிஸுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்,” என அவர் மேலும் சொன்னார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எதிர்த்தரப்பு பினாங்கை எடுத்துக் கொண்ட பின்னர், அங்கு பாஹாசா மலேசியாவுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படாதது குறித்து தாம் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக ராயிஸ் தெரிவித்தார் என நேற்று பெர்னாமா வெளியிட்ட தகவல் ஒன்று கூறியது.
அந்த மாநிலத்தில் தாம் கலந்து கொண்ட ஒர் அதிகாரத்துவ நிகழ்வில் ஏற்பாட்டாளர்கள் ஆங்கிலத்திலும் மண்டரினிலும் பேசியதிலிருந்து அது தெளிவாகத் தெரிகிறது என அவர் சொன்னார்.
அந்த நிகழ்வு நடத்தப்பட்ட விதம் குறித்து ராயிஸ் மகிழ்ச்சி அடையாவிட்டால் அவர் ஹான் சியாங் அதிகாரிகளிடம் அது பற்றி தெரிவித்திருக்க வேண்டும் என லிம் சொன்னார்.
அதற்குப் பதில் தனியார் கல்லூரி ஒன்று ஏற்பாடு செய்த நிகழ்வு ஒன்று குறித்து மாநில அரசாங்கத்தை அவசியமில்லாமல் அவர் குறை கூறுவதாக லிம் வருத்தமுடன் குறிப்பிட்டார்.
“தாம் கலந்து கொண்ட அதிகாரத்துவ நிகழ்வில் பாஹாசா மலேசியா பயன்படுத்தப்படவில்லை என்பதை ராயிஸ் நிரூபித்தால் பினாங்கு அரசாங்கம் அந்தத் தவறை சரி செய்யும்.”
“ஆனால் அவர் ஆதாரம் காட்டத் தவறினால் அவர் தமது கருத்துக்களை மீட்டுக் கொள்வதோடு மன்னிப்பும் கேட்க வேண்டும்,” என்றார் பினாங்கு முதலமைச்சர்.