கியூபெக்ஸ்: 50,000 ஒப்பந்த ஊழியர்களின் ஒப்பந்தத்தை நீட்டிப்பீர்

அரசாங்க ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான கியூபெக்ஸ், ஆண்டு இறுதியில் முடிவடையும் 50,000 அரசாங்க ஊழியர்களின் ஒப்பந்தத்தை நீட்டிக்குமாறு அரசுதுறைகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.

தங்கள் சார்பில் குரல் கொடுக்குமாறு ஒப்பந்த ஊழியர்கள் கியூபெக்சை வேண்டிக்கொண்டிருப்பதாக அதன் தலைவர் ஒமார் ஒஸ்மான் கூறினார்.

“அவர்களில் பெரும்பாலோர் 10 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றியவர்கள் என்பதால் நாங்கள் அவர்களின் நலன் காப்போம்.அவர்களுக்குக் குடும்பம் இருப்பதையும் முக்கியமாக எண்ணிப்பார்க்க வேண்டும். எனவே, அரசாங்கம் அதன் முடிவை மறுபரிசீலனை செய்யும் என எதிர்பார்க்கிறோம்”. நேற்று, கோலாலும்பூரில் விஸ்மா கியூபெக்ஸில், கியூபெக்ஸ் உச்சமன்றக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அடுத்த ஆண்டு தொடக்கம் பொதுப்பணி ஆள் சேர்ப்பில் 10 விழுக்காடு குறைக்கப்படுவது பற்றிக் கருத்துரைத்த ஒமார், அந்நடவடிக்கையின் விளைவாக புதிய பட்டதாரிகள் பலர் வேலை கிடைக்காமல் சிரமப்படுவார்கள் என்றார்.

வாய்ப்பு இல்லை

இதனிடையே, பாலர்பள்ளிகளில் ஆசிரியர்களாகவும் உதவி ஆசிரியர்களாகவும் 15 ஆண்டுகளிலிருந்து 20 ஆண்டுகள்வரை பணிபுரிந்துள்ள சுமார் 3,000 பேருக்கு தேசிய ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு துறையில் நிரந்தர ஆசிரியராகும் வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் என்றும் ஒமார் தெரிவித்தார்.

“அதன் தொடர்பில் கியூபெக்ஸ் ஏற்கனவே அத்துறைக்கு மகஜர் ஒன்றை அனுப்பியது. அதற்கு இதுவரை பதில் இல்லை”, என்றாரவர்.

பட்டயம் (டிப்ளோமா) வைத்திருப்பவர்கள் மட்டுமே ஏற்கப்படுவார்கள் என்று அத்துறை கூறுவது சரியல்ல. வேலை அனுபவத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றவர் வலியுறுத்தினார்.

கியூபெக்ஸ் அதன் கூட்டத்தில் மலேசிய தொழிலியல் மேம்பாட்டு வாரியம் நிறுவனமாக்கப்படுவது பற்றியும் விவாதித்ததாக ஒமார் கூறினார்.

“அதைத் தள்ளிவைக்குமாறு கியூபெக்ஸ் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. அதைச் செய்யுமுன்னர் அதன் ஊழியர்களுக்கு அது பற்றி விளக்க வேண்டும். நிறுவனமாக்கப்படும்போது கியூபெக்ஸும் அதில் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும்.

“அதன் தொடர்பில், ஊழியர்கள் முன்கூட்டியே பணி ஓய்வு பெறுவதற்கு அல்லது வேறொரு துறைக்கு மாற்றப்படுவதற்கு அல்லது பணியிலிருந்து விலகிக்கொள்வதற்கு விருப்புரிமை கொடுக்கப்பட வேண்டும் என்றும் கியூபெக்ஸ் பரிந்துரைத்துள்ளது”, என்று ஒமார் கூறினார்.

-பெர்னாமா