அட்னான் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக் கோரிய பின்னர் Aunty Mei கைது செய்யப்பட்டார்

கடந்த மாதம் நடைபெற்ற லைனாஸ் எதிர்ப்பு ‘பசுமை ஊர்வலம்’ மீது தாம் தெரிவித்த கருத்துக்களுக்காக பாகாங் மந்திரி புசார் அட்னான் யாகோப் மன்னிப்புக் கேட்க வேண்டும் என கோரிய பின்னர் ஒரு மூத்த குடிமகளும் அவரது இரண்டு நண்பர்களும் கைது செய்யப்பட்டார்கள்.

குவாந்தானிலிருந்து கோலாலம்பூருக்கு ஹிம்புனான் ஹிஜாவ் ஏற்பாடு செய்த 300 கிலோ மீட்டர் நடையில் பங்கு கொண்டவர்களில் 71 வயதான துவ் யின் லான் என்பவரும் ஒருவர் ஆவார். அவர் மேய் அண்ட்டி என்றும் அழைக்கப்படுகிறார்.

மாநிலச் செயலகத்தில் உள்ள மந்திரி புசார் அலுவலகத்துக்கு துவ் சென்றதாக ஹிம்புனான் ஹிஜாவ் பிரச்சாரப் பிரிவுத் தலைவர் லீ சியான் சுங் கூறினார்.

“பசுமை ஊர்வலத்தில் பங்கு கொண்டவர்கள் 200 மீட்டர் தொலைவுக்கு மட்டுமே நடந்தனர் என அட்னான் கூறிய கருத்து மீது மேய் அண்ட்டி மிகவும் ஆத்திரமடைந்துள்ளார்,” என அவர் சொன்னார்.

“முற்பகல் 11 மணியிலிருந்து அவர் அட்னான் அலுவலகத்துக்கு வெளியில் காத்துக் கொண்டிருந்தார். மந்திரி புசார் வந்ததும் அவரை நெருங்கிச் சென்று மன்னிப்புக் கேட்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் மந்திரி புசார் மறுத்து விட்டார்.”

அதற்கு பின்னர் மேய் அண்ட்டி,  வோங் சுன் யுவன், யிப் போங் கியூ ஆகியோருடன் கைது செய்யப்பட்டு குவாந்தான் போலீஸ் மாவட்டத் தலைமையகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

போலீஸ் நிலையத்துக்கு வெளியில் 20 ஆதரவாளர்கள் கூடியுள்ளனர். உதவி செய்வதற்காக  உள்ளூர் சட்ட உதவிப் பிரிவைச் சேர்ந்த இரண்டு வழக்குரைஞர்களும் அங்கு இருந்தார்கள்.

பசுமை ஊர்வலத்தில் பங்கு கொண்டவர்கள் கூறப்பட்டது போல அவ்வளவு தொலைவும் நடக்கவில்லை என்று கடந்த மாதம் நிகழ்ந்த அம்னோ பொதுப் பேரவையில் பேசிய அட்னான் கூறிக் கொண்டார்.

அவர்கள் ‘சொகுசாகவும் மோட்டார் வாகனங்களிலும்’ பயணம் செய்ததாகக் கூறிக் கொண்ட அவர் அவர்களுக்காக தாம் அனுதாபப்படவில்லை என்றார்.