நாடற்றவர்களாக உள்ள மலேசியர் விவகாரத்துக்குத் உடனடியாக தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தி இன்று காலை புத்ராஜெயாவில் அமைந்துள்ள தேசியப் பதிவுத் துறை தலைமையத்தின் முன்னால் பிகேஆர் தலைமையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. [VIDEO | 05:46mins]
காலை மணி 10 வாக்கில் சுமார் 600-க்கும் மேற்பட்டவர்கள் புத்ராஜெயா நீதித் துறை வளாகத்தில் இருந்து தேசியப் பதிவுத் துறை தலைமையகத்திற்கு ஊர்வலமாகச் சென்றனர்.
’12-12-12′ என பொறிக்கப்பட்டிருந்த சட்டைகளை அணிந்திருந்த ஆர்ப்பாட்டக்காரர்களில் பெரும்பாலோர், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரது உருவப்படங்களைக் கொண்ட போலி சிவப்பு நிற அடையாளக் அட்டைகளை ஏந்தி, ‘உரிமைகளுக்குப் போராடுவோம்’, ‘அடையாளக் கார்டு உரிமைகளுக்குப் போராடுவோம்’ என கோசங்களை எழுப்பியவாறு ஊர்வலமாகச் சென்றனர்.
ஊர்வலமாகச் சென்ற மக்கள் தேசியப் பதிவுத் துறை தலைமையகத்தை அடைந்ததும் அவர்களை வழிநடத்திச் சென்ற பிகேஆர் தலைவர்கள், தேசியப் பதிவுத் துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினர். எனினும், பணிமனை வாயில் கதவு அங்கிருந்த காவல்துறையினரால் அடைக்கப்பட்டு தலைவர்கள் முன்னேற எடுத்த முயற்சி தடுக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்த காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர் ‘கதவை திறவுங்கள்’ என கூச்சலிட்டு, அதிகாரிகளைச் சந்திக்க தலைவர்கள் அனுமதிக்கப்படவேண்டும் என ஒருமித்த குரலில் முழக்கமிட்டனர். இதனால் அங்கு பணியிலிருந்த காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமிடையே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் மக்களின் குரல் மேலும் வலுவடைந்து நிலமை மோசமடைய வேறுவழியின்றி தேசியப் பதிவுத் துறை உயர்மட்ட அதிகாரிகளைச் சந்திக்க, பிகேஆர் தலைவர்கள் காவல்துறையினரால் பணிமனையின் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டனர்.
நாடற்றவர்களாக உள்ள மலேசியர் விவகாரம் குறித்துப் பேச, பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன், சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா, பிகேஆர் சட்ட விவகார இயக்குனர் லத்தீபா கோயா, பிகேஆர் உதவித் தலைவர் சுவா ஜுய் மெங், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ ஆகியோர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைத்துச் செல்லப்பட்டனர்.
தேசியப் பதிவுத் துறை இயக்குநர் மற்றும் அத்துறை சார்ந்த உயர்மட்ட அதிகாரிகளுடன் பேசிய பிகேஆர் தலைவர்கள், நாடற்றவர்களாக உள்ள மலேசியர் விவகாரத்துக்கு, குறிப்பாக அதிகம் பாதிப்படைந்துள்ள மலேசிய இந்தியர்களின் நாடற்ற நிலைக்கு உடனடியாக தீர்வுகாணப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
எனினும், இவ்விவகாரத்திற்கு தீர்வு காண மேலும் ஆறு மாத கால அவகாசம் தேவை என தேசியப் பதிவுத் துறை இயக்குநர் தெரிவித்ததாக கூறிய சுரேந்திரன், தமது குழு அதற்கு உடன்படவில்லை எனவும் இவ்விவகாரத்திற்கு உடனடி தீர்வுதான் தேவை என்பதை மேலும் வலிறுத்தி பேசியபோது அவர்கள் ஒரு உடன்பாட்டிற்கு வந்ததாகவும் அவர் கூறினார்.
அதன்வழி, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நாடற்றவர்களாக உள்ள மலேசியர்களிடம் விண்ணப்ப பாரங்களை வழங்கிய தேசியப் பதிவுத் துறை அதிகாரிகள் அவர்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கையில் இறங்கினர்.
எனினும், இவ்விவகாரத்திற்கு வழங்கப்பட்டுள்ள உத்ரவாதம் நிறைவேற்றும்வரை போராட்டம் தொடர்ந்து கொண்டுசெல்லப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
‘பிகேஆர் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த குண்டர் கும்பல் முயற்சி’
இதனிடையே, தேசியப் பதிவுத் துறை தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வெளியேறும்போது அங்கு காத்திருந்த மஇகா உறுப்பினர்கள் சுமார் 50 பேர், பிகேஆர் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்டதாக சுரேந்திரன் வெளியே செய்தியாளர்களிடம் கூறினார்.
சம்பவத்தின்போது பிகேஆர் உதவித் தலைவர் சுவா ஜுய் மெங்கை 7 பேர் கொண்ட குண்டர் கும்பல் ஒன்று கீழே தள்ளிவிட்டதாக கூறிய சுரேந்திரன், மஇகா என உறுப்பினர்கள் கூறப்படுவோர், சுவா ஜுய் மெங்மீது நடத்திய தாக்குதல் தொடர்பான காணொளிப் பதிவை தாம் பின்னர் ஊடங்களில் வெளியிடப்போவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், தமது குழு பேச்சுவார்த்தைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இடத்திற்கு குண்டர் கும்பலைச் சேர்ந்த சுமார் 50 பேர் காவல்துறையினரால் உள்நுழைய அனுமதிக்கப்பட்டது குறித்து தாம் பெரிதும் அதிர்ச்சியடைந்ததாக செய்தியாளர்களிடம் சுரேந்திரன் கூறினார்.
பாதுகாப்புமிக்க ஒரு அரசு பணிமனைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களை காவல்துறையினர் எவ்வாறு அனுமதித்தனர் என வினவிய சுரேந்திரன், இச்சம்பவம் தொடர்பாக தாம் சட்டநடவடிக்கையில் இறங்கவுள்ளதாகவும் கூறினார்.