தனித்துவாழும் 3,011 தாய்மார்கள் ரிம16 மில்லியன் கோரி சிலாங்கூர் அரசுமீது வழக்கு

3,011 தனித்துவாழும் தாய்மார்கள், 2008 பொதுத் தேர்தல் கொள்கை விளக்க அறிக்கையில் பக்காத்தான் ரக்யாட் வாக்குறுதி அளித்தபடி ரிம16 மில்லியன் அலவன்சைத் தர வேண்டும் என்று கோரி வழக்கு தொடுத்துள்ளனர்.

சிலாங்கூர் தனித்துவாழும் தாய்மார்கள் சங்கத் தலைவி முர்தினி கஸ்மான் தலைமையில் அவர்கள் ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் வழக்கைப் பதிவு செய்தனர்.

அவர்கள் சிலாங்கூர் அரசை முதல் எதிர்வாதியாகவும் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமை இரண்டாவது எதிர்வாதியாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

2008-இல் மாநில ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர், தங்களுக்குக் கொடுப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்ட அலவன்சை மாநில அரசு கொடுக்க மறுத்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

அலவன்ஸ் கொடுக்கப்படாததற்கு தகுந்த விளக்கத்தையும் மாநில அரசு தரவில்லை.

எனவே, மாதத்துக்கு ரிம100 என்ற‘தனித்து வாழும் தாய்மாருக்கான அலவன்ஸை” 54 மாதங்களுக்கு (2008 ஏப்ரல் 1இலிருந்து 2012 அக்டோபர் 30வரை)க் கணக்கிட்டு  ரிம 16.26 மில்லியன் ரிங்கிட் தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என வாதிகள் கோரியுள்ளனர்.

‘தனித்துவாழும் தாய்மாருக்கான உதவித் திட்டம்’ ஒன்றை உருவாக்குமாறு முதல் எதிர்வாதிக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுகொண்டனர்.

18வயதுக்கு மேற்பட்ட மணவிலக்கு பெற்ற அல்லது விதவையாக்கப்பட்ட அல்லது குடும்பத்துக்காக தான் மட்டுமே உழைத்துச் சம்பாதிக்கும் ஒருவர் அல்லது வாழ்க்கைத் துணைவருடன் சேர்ந்து வாழாத ஒருவர் தனித்துவாழும் தாய்மார் ஆவார் என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

சில அரசியல் கட்சிகள் மறைமுகமாக அச்சங்கத்தைப் பயன்படுத்திக்கொண்டிருப்பதாகக் கூறப்படுவதை முர்தினி  மறுத்தார்.

“நாங்கள் இரக்கத்தை எதிர்பார்த்து வரவில்லை.பக்காத்தான் 2008 தேர்தல் கொள்கை அறிக்கையில் தனித்துவாழும் தாய்மார்களுக்கு வாக்குறுதி அளித்ததைக் கொடுக்க வேண்டும் என்றுதான் கேட்கிறோம்”.

நவம்பர் 22-இலும், இதேபோல்தான் முர்தினி 2020 தனித்துவாழும் தாய்மார்களுடன் சென்று ,மாநில அரசுக்கு எதிராக ரிம10.9 மில்லியன் வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.

-பெர்னாமா