‘மூசா மீது குற்றம் சாட்டப்படும் சாத்தியம் அதிகமாக உள்ளது என ஹாங்காங் சட்ட மன்ற உறுப்பினர் ஒருவர் சொல்கிறார்’

musaகறுப்புப் பணத்தை வெள்ளையாக்கியது (பணச் சலவை) தொடர்பில் சபா முதலமைச்சர் மூசா அமான் மீது ஹாங்காங் அதிகாரிகள் குற்றம் சாட்டக் கூடிய சாத்தியம் அதிகமாக இருப்பதாக பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் கூறிக் கொண்டுள்ளார்.

அவர் ஹாங்காங் சட்ட மன்ற உறுப்பினரான ஜேம்ஸ் தோ-வை மேற்கோள் காட்டி அந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

வெட்டுமரத் தரகுப் பணம் எனக் கூறப்படுவது தொடர்பில் மூசாவுக்கு எதிரான ‘புதிய ஆதாரங்களை’ ஹாங்காங் சுயேச்சை ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (ஐசிஏசி) சமர்பிப்பதற்காக நேற்று ராபிஸியும் மற்ற நான்கு பிகேஆர் தலைவர்களும் ஹாங்காங் சென்றனர்.musa1

அந்த ஆதாரங்கள் ஐசிஏசி-யைக் கண்காணிக்கும் சட்டமன்ற பாதுகாப்புக் குழுவின் உதவித் தலைவருமான ஜேம்ஸ் தோ-விடமும் சமர்பிக்கப்பட்டன.

“தோ-வுடன் நடந்த சந்திப்பு பயனுடையதாக இருந்தது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் பணச் சலவை தொடர்பான ஹாங்காங் சட்டங்கள் கடுமையாக இருப்பதால் மூசா மீது குற்றம் சாட்டப்படும் சாத்தியம் அதிகமாக இருப்பதாக தோ பிகேஆர் குழுவினரிடம் தெரிவித்தார்.

“குற்றவாளி எனக் கண்டு பிடிக்கப்பட்டால் இண்டர்போல் என்ற அனைத்துலகப் போலீஸ் வழியாக ஹாங்காங் அதிகாரிகள் கைது ஆணையை பிறப்பிக்க முடியும். அந்த ஆணையை மலேசியாவில் அமலாக்க முடியும்,” என ராபிஸி இன்று விடுத்த அறிக்கையில் தெரிவித்தார்.

ஐசிஏசி-யிடம் சமர்பிக்கப்பட்ட வணிகரான மைக்கல் சியா சம்பந்தப்பட்ட வங்கி அறிக்கைகளும் பரிவர்த்தனை பதிவேடுகளும் புதியவை என்றும் அவை அந்த ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு ஏற்கனவே சமர்பிக்கப்படவில்லை என்றும் அவர் நம்புகிறார்.

musa2உண்மை வெளியாகும்

சபா அம்னோவுக்கான 40 மில்லியன் ரிங்கிட் அரசியல் நன்கொடை பற்றி தமக்கு தெரிவிக்கப்படவில்லை எனக்  கூறிக் கொண்ட முன்னாள் சபா அம்னோ தலைவர் லாஜிம் உக்கின் வழங்கியுள்ள சத்தியப் பிரமாணமும்   ஐசிஏசி-யிடம் சமர்பிக்கப்பட்ட ஆவணங்களில் ஒன்றாகும்.

“சியா சம்பந்தப்பட்ட கூடுதல் தகவல்களை வழங்கவும் வாக்குமூலம் கொடுக்கவும் முன் வந்துள்ள ரகசியமான  சாட்சியை ஐசிஏசி அழைக்கும் என நான் நம்புகிறேன்,” என்றார் ராபிஸி.

“ஹாங்காங்கில் தமது வாக்குமூலத்தைக் கொடுக்குமாறு லாஜிமும் அழைக்கப்படுவார் என்றும் நான்  கருதுகிறேன்.”

புலனாய்வுகள் ரகசியமாக இருக்கும் பொருட்டு மேலும் அறிக்கைகளை விடுக்க வேண்டாம் என ஐசிஏசி  தங்களைக் கேட்டுக் கொண்டதாகவும் ராபிஸி சொன்னார்.

அந்த விவகாரம் கடுமையாக எடுத்துக் கொள்ளப்பட்டு சாட்சிகளை அழைப்பது உட்பட மேல் நடவடிக்கைகள்  எடுக்கப்படும் என்பதையே அது காட்டுவதாக ராபிஸி எண்ணுகிறார்.

“அந்த விவகாரம் மீண்டும் திறக்கப்படும் என்பதை ஐசிஏசி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை என்றாலும் அதன் மீது காட்டப்படும் தீவிரமும் கவனமும் முழுமையான புலனாய்வு தொடரும் என்பதை உணர்த்துகின்றன.”

அந்த விவகாரத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும் சட்டத்துறைத் தலைவர் அலுவலகமும் மீண்டும்  திறக்கும் பொருட்டு நெருக்குதல் தொடுப்பதற்காக அந்த விஷயம் தொடர்பான புதிய நிலவரத்தை பிகேஆர்  மலேசியர்களுக்கு விளக்கும் என்றும் ராபிஸி தெரிவித்தார்.

செலாயாங் எம்பி வில்லியம் லியோங், பெட்டாலிங் ஜெயா செலாத்தான் எம்பி ஹீ லோய் சியான், தேஜா சட்டமன்ற உறுப்பினர் சாங் லி ஹாங், பிகேஆர் துணைத் தலைமைச் செயலாளரும் பெனாம்பாங் தொகுதி தலைவருமான டாரெல் லெய்கிங் ஆகியோர் ராபிஸியுடன் ஹாங்காங் சென்ற மற்ற நான்கு பிகேஆர் தலைவர்கள் ஆவர்.