எம் ஞானப்பிரகாசம் 1946ம் ஆண்டு தைப்பிங்கில் பிறந்தார். பல வரலாற்று முக்கியத்துவம் கொண்ட மலேசிய நிகழ்வுகளை அவர் கண்டுள்ளார். அவற்றுள் 1946 முதல் 1960 வரை நீடித்த கம்யூனிஸ்ட் அவசர காலம், 1957ம் ஆண்டு நாடு சுதந்தரமடைவதற்கு வழி கோலிய மலாயா சுதந்திரப் போராட்டங்கள் ஆகியவையும் அடங்கும்.
ஆனால் ஞானப்பிரகாசத்துடைய சொந்த குடியுரிமைப் போராட்டம் அவர் பிறந்த நாடு பிரிட்டிஷ் காலனித்துவப் பிடிகளிலிருந்து விடுபட்டதற்கு ஒர் ஆண்டு கழித்துத் தொடங்கியது.
குடியுரிமை பெறுவதற்கு அவர் மேற்கொண்ட ஆறு முயற்சிகளையும் அவர் “Perkara 16″ல் வெற்றி காண முடியவில்லை எனக் காரணம் காட்டி தேசியப் பதிவுத் துறை நிராகரித்து விட்டது. அதனால் அவர் விரக்தி அடைந்துள்ளார்.
ஆனால் அந்த “Perkara 16” என்ன என்பதற்கு விளக்கம் தரப்படவே இல்லை என அவர் சொன்னார்.
மை கார்டைப் பெறுவதற்கு மசீச, மஇகா உதவியை நாடுவதற்கு ஞானப்பிரகாசம் மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.
“எனக்கு நீல நிற அடையாளக் கார்டு இல்லாததால் அரசாங்க வேலை கிடைக்காது. நான் பாதுகாவலராக மட்டுமே வேலை செய்ய முடியும்,” என அவர் நிரந்தரவாசிக்கான தமது சிவப்பு நிற அடையாளக் கார்டை காட்டிக் கொண்டு ஆத்திரமாகக் கூறினார்.
புத்ராஜெயாவில் நேற்று நிகழ்ந்த நாடற்ற மக்கள் பேரணியில் பங்கு கொண்ட 500 பேரில் ஞானப்பிரகாசமும் ஒருவர் ஆவார்.
1987ம் ஆண்டு பிறந்த ராஜீவ்-வும் கூட மை கார்டுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்.
நேற்று அவரும் அந்தப் பேரணியிலிருந்து கலந்து கொள்வதற்காக ஜோகூரிலிருந்து புத்ராஜெயாவுக்கு வந்திருந்தார். தேசியப் பதிவுத் துறை தமது விண்ணப்பங்களை ஐந்து முறை நிராகரித்து விட்டதாக ராஜீவ் மலேசியாகினியிடம் கூறினார்.
கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது மீது கண்ணீர் விட்டார்
அவரது பிறப்புச் சான்றிதழில் அவருடைய இரண்டு பெற்றோர்களுடைய பெயர்கள் இல்லாததே அதற்குக் காரணம்.
அந்தக் காரணத்தின் அடிப்படையில் அவர் பொதுத் தேர்வுகளை எடுக்க முடியவில்லை. வேலை வாய்ப்புக்களும் மறுக்கப்பட்டுள்ளன.
யூபிஎஸ்ஆர், பிஎம்ஆர், எஸ்பிஎம் தேர்வுகளை எழுத முடியவில்லை. பாடப்புத்தக உதவித் திட்டத்தின் மூலமும் நன்மை பெற முடியவில்லை.
“நடப்பு விதிகளின் கீழ் மலேசியர் அல்லாதவர் அந்தத் திட்டத்தில் சேருவதற்கு தகுதி இல்லை,” என அவர் வருத்தமுடன் சொன்னார்.
50 வயதான ஆர் ராஜகுமாரியைப் பொறுத்த வரையில் மை கார்டு இல்லாததால் போலீசைக் கண்டு அச்சத்துடனேயே வாழ வேண்டியிருக்கிறது.
“நான் மைகார்டுக்கு இரண்டு முறை விண்ணப்பித்தேன். ஆனால் அவை நிராகரிக்கப்பட்டன. காரணம் காலஞ்சென்ற என் பெற்றோர்களுடைய திருமணச் சான்றிதழை நான் சமர்பிக்கத் தவறியதாகும்.”
“நான் பிள்ளைகளைக் கூட பெற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் என் சொந்தத் திருமணத்தைக் கூடப் பதிவு செய்ய முடியாது,” என கிள்ளானில் பிறந்த ராஜகுமாரி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
அவர்களைப் போன்ற மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு தேசியப் பதிவுத் துறையே காரணம் என அந்தப் பேரணியை ஏற்பாடு செய்த என் சுரேந்திரன் கூறினார்.
“அந்த முறை தோல்வி அடைந்து விட்டதாக நீங்கள் எண்ணவில்லையா ? இவர்களைப் போன்று ஆயிரக்கணக்கான மக்கள் இருக்கின்றனர்,” என பிகேஆர் உதவித் தலைவருமான அவர் தெரிவித்தார்.
“அது தேசியப் பதிவுத் துறையின் தோல்வி. அதனை தேசியப் பதிவுத் துறையோ உள்துறை அமைச்சோ அரசாங்கமோ தீர்க்கப் போவதில்லை.”