சிங்கப்பூர் நீதிபதி ஜிபி செல்வம் வழங்கிய ஒரு நீதிமன்ற தீர்ப்பை திருடியதாக கூறப்படும் மேல்முறையீட்டு நீதிபதி பதவியிலிருந்து அகற்றப்பட வேண்டும் எனக் கோரும் தீர்மானம் ஒன்றுக்கு 60 பக்கத்தான் ரக்யாட் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
“இது அவரின் (பதில் கூறுவதற்கான உரிமையின் அடிப்படையில் பதில் கிடைக்கும் வரையில் அவரது பெயரை மலேசியாகினி வெளியிடாமல் வைத்துள்ளது) மிகக் கடுமையான தவறான நடத்தை என்பது தெளிவாகும். இச்செயல் மலேசிய நீதி நிருவாகத்திற்கு இழிவை ஏற்படுத்தியுள்ளது”, என்று டிஎபியின் தலைவரும் மூத்த வழக்குரைஞருமான கர்பால் சிங் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினரான கர்பால், அத்தீர்மானம் இன்று காலை மக்களவை தலைவர் அலுவலகத்தில் நிலைநிறை விதி 27, 36(8) மற்றும் அரசமைப்புச் சட்ட விதி 127 இன் கீழ் தாக்கல் செய்யப்பட்டதாக கூறினார்.
ஆகஸ்ட் 22 இல் தாம் அந்த நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்ததாகவும், அதில் அவர் பதில் கூறுவதற்கு 7 நாள் அவகாசம் கொடுத்திருந்ததாகவும் கூறினார். ஆனால், இன்றுவரையில் பதில் ஏதும் வரவில்லை என்றாரவர்.
செப்டம்பர் 29 ஆம் தேதியில் தாம் அந்த நீதிபதிக்கு இன்னொரு கடிதம் எழுதியதாகவும், அக்கடிதத்தில் அவர் தீர்ப்பை திருடியாத கூறப்படுவதற்கு பதில் ஏதும் அளிக்காததால், அது தவறான நடத்தையை ஒப்புக்கொள்வதாகும் என்றும் கூறியிருந்ததாக கர்பால் மேலும் கூறினார்.
கர்பால் தாக்கல் செய்த அத்தீர்மானத்தில் மலேசிய நீதித்துறைக்கு இழிவை ஏற்படுத்திய அந்த நீதிபதியை தவறான நடத்தைக்காக மேல்முறையீட்டு நீதிபதி பதவியிலிருந்து அகற்றும் நோக்கத்தோடு அவரை விசாரணை மன்றத்தில் நிறுத்துவதற்கு பிரதமர் நஜிப் அரசமைப்புச் சட்ட விதி 123 (3) இன் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மக்களவை கோருகிறது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், விசாரணை மன்றத்தின் தீர்ப்பு வரும் வரையில், அந்த நீதிபதி மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி தகுதியிலிருந்து உடனடியாக தள்ளிவைக்கப்பட வேண்டும் என்று அத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
நீதிபதி செல்வத்தின் தீர்ப்பை சொல்லுக்குச் சொல் அந்த நீதிபதி திருடினாரா என்று வினவியபோது, நீதிபதிகள் இதர தீர்ப்புகளை மேற்கோள் காட்டலாம். ஆனால், அத்தீர்ப்பு வழங்கியவரை முறையோடு கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் என்று கர்பால் தெரிவித்தார்.
“(இந்த வழக்கில்) சில பகுதிகள் சொல்லுக்குச் சொல் திருடப்பட்டுள்ளது. அவர் தீர்ப்பின் பகுதிகளை சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், அது மேற்கோளாகக் காட்டப்பட வேண்டும். அவர் அதைச் செய்யவில்லை”, என்று கர்பால் கூறினார்.