இசி என்னும் தேர்தல் ஆணையத்தில் சேருவதற்கு முன்னரே தமது அம்னோ பதவியிலிருந்து விலகி விட்டதாக சபா தேர்தல் ஆணைய துணை இயக்குநர் (நடவடிக்கை) அக்ஸா நஸ்ரா கூறுகிறார்.
“இசி-யில் சேருவதற்கு முன்பே நான் அம்னோ இளைஞர் பதவியைக் கை விட்டு விட்டேன்,” என அவர் மலேசியாகினி தொடர்பு கொண்ட போது கூறினார். தாம் இப்போது அரசியல் நடவடிக்கை எதிலும் கலந்து கொள்வதில்லை என்றார் அவர்.
இசி அந்த விஷயத்தைத் தீர்த்து விட்டதாகவும் முன்னாள் கினாபாத்தாங்கான அம்னோ இளைஞர் தொகுதி தகவல் பிரிவுத் தலைவரான அவர் தெரிவித்தார்.
“நான் அம்னோ இளைஞர் பிரிவு அல்லது எந்த அரசியல் நடவடிக்கையிலும் சம்பந்தப்படவில்லை. ஆகவே சபா பாஸ் இளைஞர் தலைவர் லாஹிருல் (லாட்டிகு) எழுப்பிய பிரச்னை செல்லுபடியாகாது,” என அக்ஸா சொன்னார்.
தமக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு தமது சொந்த அடிப்படையிலேயே பதில் அளிப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இசி-யின் கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காக தாம் பதவி துறக்க வேண்டும் அல்லது அம்னோ பதவியைக் கை விட வேண்டும் என லாஹிருல் கோரியுள்ளது பற்றி வினவப்பட்ட போது அக்ஸா அவ்வாறு பதில் அளித்தார்.
இதனிடையே அம்னோவில் தமக்கு உள்ள பங்கு மீது ராஜினாமா செய்யுமாறு அக்ஸாவுக்கு இசி அறிவுரை கூறாது என இசி தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் சொன்னதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
என்றாலும் இசி-யில் பணியாற்றும் போது அக்ஸா அரசியல் கட்சியில் தீவிரப் பங்காற்றக் கூடாது அல்லது பதவிகளையும் வகிக்கக் கூடாது என்றார் அப்துல் அஜிஸ்.