இண்ட்ராப்புடன் முறைப்படியான ஒப்பந்தம் எதுவும் இல்லை : தியான் சுவா

Hindraf meeting with Anwarபக்காத்தான் ரக்யாட், இந்தியர்களில் வறிய நிலையில் உள்ளவர்களைக் கைதூக்கிவிடுவதன் தொடர்பில் இண்ட்ராப்புடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருப்பதாக வெளிவந்துள்ள செய்தியை பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா மறுத்துள்ளார்.

“இண்ட்ராப்பின் செயல்திட்டத்தை ஏற்றுகொண்டு பக்காத்தான் ரக்யாட் ஜனவரி முதல் வாரத்தில் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடும் என இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி கூறியதாக மலேசியாகினியில் செவாய்க்கிழமை வெளிவந்த செய்தி குறித்து விளக்களிக்க விரும்புகிறேன்”, என்று சுவா நேற்று ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.

பக்காத்தான்-இண்ட்ராப் பேச்சுகளில் நேரடியாக ஈடுபட்டவரும் பத்து எம்பியுமான சுவா, அந்த “நுண்ணிய” பேச்சுகள் இன்னும் முழுமை பெறவில்லை என்றார்.

“இண்ட்ராப் திட்டத்தில் உள்ள சில தீர்வுகள் எங்களுக்கும் ஏற்புடையவையே. உதாரணத்துக்கு நீண்டகாலமாக இருந்துவரும் நாடற்றவர் பிரச்னை. இங்கு பிறந்திருந்தாலும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் நாடற்றவர்களாகவுள்ளனர்.

“இந்த அநியாயத்துக்கு விரைவான தீர்வு காண்பதை பிகேஆர் ஒரு கடப்பாடாகக் கொண்டிருக்கிறது. அதேவேளை வேறு சில பரிந்துரைகளைப் பொருத்தவரை எங்கள் அணுகுமுறை மாறுபடுகிறது”, என்றாரவர்.

பரஸ்பரம் அக்கறையுள்ள விவகாரங்கள் மீது கருத்துப்பரிமாற்றம் செய்துகொள்ளும் நோக்கில் இரு தரப்புகளும் செப்டம்பரில் பேச்சுகளைத் தொடக்கின என்று சுவா தெரிவித்தார்.

tianஅந்தப் பேச்சுகளின்போதுதான் இண்ட்ராப், ‘வறிய நிலையில் உள்ள இந்தியர்களைக் கைதூக்கி விடுவதற்கான ஐந்தாண்டு செயல்திட்டத்தை’ முன்வைத்தது. அத்திட்டத்தில் இந்தியர்களின் பிரச்னைகளும் அவற்றைக் களைவதற்கான தீர்வுகளும் விவரிக்கப்பட்டிருந்தன.

இண்ட்ராப் முன்வைக்கும் தீர்வுகளை பிகேஆர் ஏற்றுக்கொண்டாலும் அது கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகளின் ஒப்புதலையும் பெற வேண்டியது அவசியமாகும் என்றார் சுவா.

“அரசியல் திட்டமொன்றை உருவாக்கும்போது, பிகேஆர் தன்மூப்பாகவோ பக்காத்தான் ரக்யாட்டின் பங்காளிகளின் இணக்கமின்றியோ செயல்படாது என்பதை இண்ட்ராப்பிடம் தெளிவாகச் சொல்லியிருக்கிறோம்”.

இண்ட்ராப்பின் செயல்திட்டம் முதலில் பக்காத்தான் ரக்யாட் தலைமைத்துவ மன்றத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு ஏற்கப்பட வேண்டும்.

“அது இன்னும் நடைபெறவில்லை. எனவே, ஒப்பந்தம் செய்துகொள்வது பற்றி அறிவிக்க இன்னும் நேரம் வரவில்லை.

“இண்ட்ராப்புக்கும் பக்காத்தானுக்குமிடையிலான உறவுகளை பிகேஆர் தனித்து முடிவு செய்ய முடியாது, மூன்று கட்சிகளும் சேர்ந்தே தீர்மானிக்க வேண்டும்”, என்று சுவா கூறினார்.

அச்செயல்திட்டம் மீது பக்காத்தானுக்கும் இண்ட்ராபுக்குமிடையில் திட்டவட்டமான ஒப்பந்தம் எதுவும் இப்போதைக்கு இல்லை என்றாலும், தமது கட்சி இண்ட்ராப் தலைவர்களுடன் தொடர்ந்து பேச்சுகள் நடத்தி பொதுவான விவகாரங்களில் ஒத்துழைப்பதற்கான வழிகளை ஆராயும் என்றாரவர்.