கர்பாலுக்கு ரிம50 ஆயிரம் கொடுக்குமாறு உத்துசானுக்கு நீதிமன்றம் உத்தரவு

utusanஅம்னோவுக்குச் சொந்தமான நாளேடான உத்துசான் மலேசியா, அவதூறு வழக்கு ஒன்றில் குற்றவாளியென தீர்மானிக்கப்பட்டு டிஏபி தலைவர் கர்பால் சிங்குக்கு இழப்பீடாகவும் செலவுத்தொகையாகவும் ரிம70,000 கொடுக்க வேண்டும் என கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

karpalநான்கு ஆண்டுகளுக்குமுன், பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலுக்கு முந்திய நாள், கர்பால் அங்கு செல்லவில்லை என்றாலும் அங்கு அவர் பேசியதாக அந்நாளேடு தவறாக செய்தி வெளியிட்டிருந்ததன் தொடர்பில் அவ்வழக்கு தொடரப்பட்டது.

அச்செய்தியை எழுதிய சுல்கிப்ளி ஜலில்- இப்போது அந்நாளேட்டின் செய்தி ஆசிரியர்- ஆண்டு தொடக்கத்தில் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தபோது செய்தி வெளியிட்டதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

நீதிபதி நிக் ஹஸ்மட் நிக் முகம்மட், மன்னிப்பு கேட்பதால் மட்டும் உத்துசான் குற்றச்சாட்டிலிருந்து விடுபட முடியாது என்று தீர்ப்பளித்தார்.

அச்செய்தியால் வாதியின் நற்பெயருக்குக் களங்கம் உண்டாக்கப்பட்டுள்ளது.

“அதன் விளைவாக பொதுமக்கள் வாதியை வெறுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அதற்கு இழப்பீடாக ரிம50,000 கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடுகிறது”, என்று நீதிபதி நிக் ஹஸ்மட் கூறினார்.

கர்பால் அவ்வழக்கில் உத்துசான் மலாயு(எம்) பெர்ஹாட்டை எதிர்வாதியாகக் குறிப்பிட்டிருந்தார்.