பத்து மலை கொண்டோமினிய விவகாரத்தில் தம்மைப் பற்றி சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ரோனி லியு தெரிவித்த கருத்துகளுக்காக அவரிடம் ரிம1 மில்லியன் இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு தொடுத்துள்ளார் ஹுலு சிலாங்கூர் எம்பி பி.கமலநாதன்.
மஇகா புத்ரா தலைவரான கமலநாதன், நேற்று கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கைப் பதிவு செய்தார்.
கமலநாதன் இழப்பீட்டுக்கான தம்முடைய கோரிக்கையில், இவ்வாண்டு அக்டோபர் 23-இல், இணைய செய்தித்தளமான ஃபிரி மலேசியா டுடேயிடம் லியு தெரிவித்த கருத்துகள் சர்ச்சைக்குரிய 29-மாடி கொண்டோமிய திட்டத்துக்கு செலாயாங் முனிசிபல் மன்றம் 2007, செப்டம்பர் 27-இல் ஒப்புதல் அளிக்க முடிவு செய்ததில் தமக்கும் பங்குண்டு என்ற பொருள்பட அமைந்துள்ளன என்று கூறினார்.
2006-இலேயே முனிசிபல் மன்றத்தில் தம் உறுப்பினர் பதவி முடிவுக்கு வந்துவிட்டதாக அந்த ஹுலு சிலாங்கூர் எம்பி குறிப்பிட்டார்.
அக்கருத்துகளால் தாம் பழிச்சொல்லுக்கும் இகழ்ச்சிக்கும் வெறுப்புக்கும் ஆளாகி இருப்பதுடன் அடுத்த தேர்தலில் மீண்டும் எம்பி பதவிக்குப் போட்டியிடும் வாய்ப்பும் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
சொன்ன கருத்துகளை மீட்டுக்கொள்ளுமாறு தம் வழக்குரைஞர்கள் நவம்பர் 9-இல் கடிதம் எழுதினார்கள் என்றும் அவர் சொன்னார். ஆனால், அது புறக்கணிக்கப்பட்டது.
எனவே, தமக்கு ஏற்படுத்திய அவதூறுக்கு ரிம1 மில்லியன் இழப்பீடும் தமக்குக் களங்கம் உண்டாக்கும் வகையில் லியு மீண்டும் பேசக்கூடாது என்ற தடை உத்தரவும் கேட்டு கமலநாதன் வழக்கு தொடுத்துள்ளார்.
மஇகா, பிஎன் பெயர் களங்கப்படுத்தப்பட்டுள்ளது
வழக்கு பதிவு செய்ததைத் தொடர்ந்து வெளியிட்ட பத்திரிகை அறிக்கையில், தமக்கும் மஇகா மற்றும் பிஎன்னுக்குள்ள நற்பெயரையும் பாதுகாக்க வழக்கு தொடுப்பது அவசியமாயிற்று என கமலநாதன் குறிப்பிட்டிருந்தார்.
“நான் கவுன்சிலராக பணியாற்றிய காலம் முடிந்து விட்டது. எனவே, பத்துமலை கொண்டோமினிய திட்டம் பற்றி முடிவெடுப்பதில் எனக்குத் தொடர்பில்லை.
“அதை நாடாளுமன்றத்திலும் தெளிவாக விளக்கி, லியு உண்மையிலேயே தெரியாமல் என் பெயரைக் குறிப்பிட்டிருந்தால் மன்னிப்பு கேட்டால் போதும் என்றும் கோரினேன்.
“ஆனால், லியு (வலம்) என் கோரிக்கைக்குப் பதில் அளிக்கவில்லை. எனவே உண்மை வெளிவர நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.
“மலேசியர்கள், குறிப்பாக இந்தியர்கள் இந்தத் திட்டத்தில் தொடக்கத்திலிருந்தே எனக்கு எவ்வித தொடர்பு இல்லை என்பதை உணர வேண்டும்”, என்றாரவர்.
எதிர்தரப்புத் தலைவர்கள்போல் ரிம10 மில்லியன், ரிம100மில்லியன் இழப்பீடு கேட்டு தாம் வழக்கு தொடரவில்லை என்றும் அந்த வகையில் பணம் பண்ணும் நோக்கம் தமக்கு இல்லை என்றும் அவர் சொன்னார்.
“பத்துமலை கொண்டோமினியத்துக்கு ஒப்புதல் கொடுத்ததில் நான் சம்பந்தப்படவில்லை என்ற உண்மை வெளிவர வேண்டும் என்பதுதான் என் விருப்பம்”, என்று கமலநாதன் கூறினார்.