பெர்க்காசா: 13வது பொதுத் தேர்தலில் பிஎன் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற வேண்டும்

perkasaஅடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் -னுக்கு மலாய் உரிமை நெருக்குதல் அமைப்பான பெர்க்காசா ஆதரவு தெரிவித்துள்ளது

நாட்டை ஆளும் கூட்டணி அந்தத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்று வலுவான அரசாங்கத்தை அமைக்க பெர்க்காசா உதவும் என அதன் தலைவர் இப்ராஹிம் அலி இன்று வாக்குறுதி அளித்தார்.

கோலாலம்பூரில் இன்று தாமான் தித்திவாங்சாவில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பேராளர்களும் பார்வையாளர்களும் கலந்து கொண்ட பெர்க்காசா ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் அந்த வாக்குறுதியை அவர் வழங்கினார்.

“சமயம், இனம், நாடு ஆகியவற்றை பாதுகாப்பதற்காக நாங்கள் பிளவுபட மாட்டோம், சரணடைய மாட்டோம், துரோகிகளாக மாற மாட்டோம் என நாங்கள் உறுதி கூறுகிறோம்.”

“பிஎன் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறுவதை உறுதி செய்ய நாங்கள் அதற்கு உதவுவோம்,” எனவும் இப்ராஹிம் தமது கொள்கை உரையில் கூறினார்.

மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பிஎன் மீண்டும் பெறுமானால் மலாய் ஆட்சியாளர்கள், இஸ்லாம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை மற்ற இனங்கள் எழுப்ப மாட்டா என பாசிர் மாஸ் சுயேச்சை எம்பி-யுமான இப்ராஹிம் சொன்னார்.

வரும் தேர்தலில் எல்லா பிஎன் வேட்பாளர்களையும் ஆதரிக்குமாறும் அவர் அனைத்து பெர்க்காசா உறுப்பினர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

அரசு சாரா அமைப்பான பெர்க்காசாவுக்கு நாடு முழுவதும் 352,000 உறுப்பினர்கள் இருப்பதாக  கூறப்பட்டுள்ளது.

 

TAGS: