கம்பள வணிகரான தீபக் ஜெய்கிஷன், குற்றம் பற்றி அறிந்திருந்தும் அதனைச் சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் தெரிவிக்கத் தவறி விட்டதாக பினாங்கில் அவர் மீது போலீசில் புகார் செய்யப்படும்.
“ஒரு கொலை பற்றி அவருக்கு தெரிந்துள்ளது. ஆனால் அது பற்றி புகார் செய்யவில்லை. அதனால் அவர் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்துள்ளார்,” என பினாங்கில் 16வது டிஏபி தேசியப் பேரவையில் பேசிய அதன் தேசியத் தலைவர் கர்பால் சிங் கூறினார்.
கொலை போன்ற சிக்கலான விஷயங்களில் தாம் சம்பந்தப்படாமல் இருக்கவே விரும்புவதாக மலேசியாகினியிடம் தீபக் தெரிவித்துள்ளது, புதிய புலனாய்வுகள் உடனடியாகத் தொடங்க வேண்டும் என அர்த்தம் என கர்பால் சொன்னார்.
“பிரதமர் சம்பந்தப்பட்டிருந்தால் ஏதாவது செய்யப்பட வேண்டும். தீபக் சொன்னதில் பொருள் உள்ளது. எனவே புதிய புலனாய்வுகள் நடத்தப்பட வேண்டும்,” என்றார் அவர்.
பிரதமர் நஜிப் ரசாக்கின் இரண்டு முன்னாள் பாதுகாவலர்கள் மங்கோலிய மாது அல்தான்துயா ஷாரிபுவை கொலை செய்தது சம்பந்தமாக அண்மையில் தீபக் பல குற்றச்சாட்டுக்களை தெரிவித்திருந்தார்.
மலேசியாவுக்கு மொத்தம் 7.3 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள இரண்டு ஸ்கார்ப்பின் ரக நீர்மூழ்கிகள் கொள்முதல் செய்யப்பட்ட போது நஜிப் துணைப் பிரதமராகவும் தற்காப்பு அமைச்சராகவும் இருந்தார்.
தனிப்பட்ட துப்பறிவாளர் பி பாலசுப்ரமணியத்தை சந்திக்குமாறு தமது இளைய சகோதரர் நாஸிமைக் கேட்டுக் கொண்ட போது நஜிப், பாலசுப்ரமணியம் தமது முதலாவது சத்தியப் பிரமாணத்தை மீட்டுக் கொள்வதிலும் முக்கியப் பங்காற்றியதாகவும் தீபக் இன்னொரு பேட்டியில் கூறியதாக ஹாராக்கா ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.
யாரும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல
ஷா அலாம் உயர் நீதிமன்றத்தில் அந்த இரண்டு பாதுகாவலர்கள் மீது விசாரணை நடத்தப்பட்ட போது வழக்குரைஞர் என்ற முறையில் அந்த விசாரணையை கவனிக்குமாறு கர்பால் பணிக்கப்பட்டிருந்தார்.
அவர் புக்கிட் குளுகோர் எம்பி-யும் ஆவார்.
“புதிய போலீஸ் புலனாய்வுகள் தொடங்க வேண்டும். இதற்குப் பின்னர் உடனடியாக இங்குள்ள போலீஸ் நிலையம் ஒன்றில் புலானய்வு தொடங்குவதற்கு உதவியாக தீபக் மீது புகார் செய்யப்படும்,” என்றார் கர்பால்.
“கொலை நிகழும் என்பதை அறிந்துள்ள எந்த நபரும் போலீசில் கட்டாயம் புகார் செய்ய வேண்டும். தீபக் போலீசில் புகார் செய்யவில்லை. ஆகவே குற்றம் புரிந்துள்ளார்.”
“இதில் முக்கியமானது தீபக் அல்ல. அவர் வெளியிட்ட தகவல்கள்தான் முக்கியமானவை. புகார் போலீஸ் புலனாய்வு தொடங்க வழி வகுக்குமா? பிரதமர் சம்பந்தப்பட்டிருந்தால் அவர் அதற்குப் பதில் சொல்ல வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.
“அல்தான்துயா ஆன்மா அமைதியாக துயில வேண்டும். ஒரு குற்றம் புரியப்பட்டுள்ளதால் நான் இதனைச் சொல்கிறேன். நீங்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் நீங்கள் விளைவுகளை எதிர்நோக்கத்தான் வேண்டும்.”