கம்பள வணிகரான தீபக் ஜெய்கிஷன் வெளியிட்டுள்ள தகவல்களைத் தொடர்ந்து மங்கோலிய மாது அல்தான்துயா கொலை வழக்கு மீதான விசாரணையை மீண்டும் தொடங்குமாறு பிகேஆர் ஆதரவு பெற்ற புக்கு ஜிங்கா என்ற அரசு சாரா அமைப்பு சட்டத்துறைத் தலைவரைக் கேட்டுக் கொண்டுள்ளது.
கொலையில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் தரப்புக்களைச் சுட்டிக்காட்டி தீபக் அண்மையில் விடுத்துள்ள அறிக்கை சட்டத்துறைத் தலைவர் விசாரணையைத் தொடங்குவதை அவசியமாக்கியுள்ளது என அதன் ஒருங்கிணைப்பாளரான பேரிஸ் மூசா கூறினார்.
“… தீபக்கின் ஒப்புதல் வாக்குமூலமும் அவர் வெளியிட்ட தகவல்களும் அல்தான்துயா கொலையில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட சாட்சிகள் இருப்பதை நிரூபிக்கின்றது,” என அவர் நேற்று பிற்பகல் டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யும் முன்னர் நிருபர்களிடம் கூறினார்.
2008ம் ஆண்டு தனிப்பட்ட துப்பறிவாளரான பி பாலசுப்ரமணியம் தமது முதலாவது சத்தியப் பிரமாணத்தை மீட்டுக் கொண்டதில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சம்பந்தப்பட்டுள்ளதாக அண்மையில் தீபக் கூறிக் கொண்டிருந்தார்.
முரண்பாடான சத்தியப் பிரமாணங்கள் சம்பந்தப்பட்ட விவகாரத்தை எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் முயன்றதாகவும் தீபக் குற்றம் சாட்டியுள்ளதால் பாலா மீதான விசாரணையையும் அந்த ஆணையம் மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் பேரிஸ் கேட்டுக் கொண்டார்.
மூடி மறைக்க முயன்றதாக எம்ஏசிசி மீது கூட போலீஸ் புலனாய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் சொன்னார்.