ராம்லி: அதிகாரத்துவ பிரியாவிடை குறித்து மூசா பொறாமை கொண்டுள்ளாரா ?

Ramliமுன்னாள் வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு இயக்குநர் ராம்லி யூசோப், தமக்கு நடப்பு தேசியப் போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) இஸ்மாயில் ஒமார் கடந்த மாதம் வழங்கிய முறையான ஒய்வுக்கால பிரியாவிடை குறித்து முன்னாள் ஐஜிபி மூசா ஹசான் பொறாமை கொண்டிருக்கக் கூடும் என நம்புகிறார்.

“மூசா ஒய்வு பெற்ற போது இஸ்மாயில் அவருக்கு முறையான பிரியாவிடை நிகழ்வு எதனையும் நடத்தவில்லை. ஆனால் எனக்கு அந்த கௌரவம் கிடைத்தது. அதனால் மூசா பொறாமை கொண்டிருக்க வேண்டும் என நான் எண்ணுகிறேன்,”

ராம்லி 2008ம் ஆண்டு மார்ச் முதல் தேதி கட்டாய ஒய்வு வயதை அடைந்தார். ஆனால் அவர் மீது சொத்துக்களை அறிவிக்கத் தவறி விட்டதாகக் கூறப்பட்ட நீதிமன்ற வழக்கு ஒன்று  நடந்து கொண்டிருந்தது.

ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் நீதிமன்றங்கள் அவரை அந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தன. அதனைத் தொடர்ந்து அவருக்கு அதிகாரத்துவ பிரியாவிடை நிகழ்வு நடத்தப்பட்டது.

“அதனால் தான் மூசா இஸ்மாயில் மீது வெறுப்பைக் காட்டுவதாக நான் நினைக்கிறேன். அதே சடங்கு நடத்தப்பட வேண்டும் என மூசா விரும்பினால் ஐஜிபி-யிடம் நல்ல விதமாகக் கேளுங்கள், மூசா ஏன் இஸ்மாயிலை வெளிப்படையாக தாக்கிப் பேச வேண்டும் ?” எனப் புன்னகையுடன் கூறிய ராம்லி, மூசா-வும் இஸ்மாயிலும் தமக்குக் கீழ் குற்றப் புலனாய்வுத் துறையில் ஆறு ஆண்டுகள் வேலை செய்ததாகவும் தெரிவித்தார்.

தமது காலத்தில் நிர்வாகத் தலையீடோ, உள்துறை அமைச்சருடைய தலையீடோ இல்லை என்றும் போலீசார் தங்கள் வேலைகளைத் தொழில் ரீதியாகச் செய்ய முடிந்தது என்றும் ராம்லி தெரிவித்தார்.