சபாவில் இவ்வாண்டு விதிகளையும் கட்டுகோப்பையும் மீறியதற்காக 68 போலீஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவர்களில் சபா போலீஸ் பட்டாளத் தலைமையகத்தைச் சேர்ந்த சிவிலியன் ஊழியர்களும் அதிகாரிகளும் அடங்குவர்.
அந்த விவரங்களைச் சபா போலீஸ் ஆணையாளர் ஹம்சா தாயிப் வெளியிட்டார்.
சபாவில் உள்ள போலீஸ் பட்டாளத் தலைமையகத்தை சேர்ந்த ஒழுங்கு நடவடிக்கைப் பிரிவு விசாரணை நடத்திய பின்னர் 1993ம் ஆண்டுக்கான பொது அதிகாரிகள் (நடத்தை, கட்டொழுங்கு) விதிகளின் 36, 37வது பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
“அவர்களில் மூவர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். மற்றவர்களுக்கு எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டன அல்லது அபராதங்கள் விதிக்கப்பட்டன அல்லது ஊதியங்கள் குறைக்கப்பட்டன.”
“ஆணைகளுக்குக் கீழ்ப்படியாதது, கடமையின் போது கவனக்குறைவாக இருந்தது, கட்டுக்கோப்பாக இல்லாதது ஆகியவை அவர்கள் செய்த குற்றங்களில் அடங்கும்,” என ஹம்சா இன்று கோத்தா கினாபாலுவில் நிருபர்களிடம் கூறினார்.
அதற்கு முன்னதாக அவர், சபா போலீஸ் பட்டாளத்தின் மாதாந்திரக் கூட்டத்தைத் தொடக்கி வைத்தார்.
போலீசில் கட்டொழுங்கை மீறும் சம்பவங்கள் இன்னும் கட்டுக்குள் இருப்பதாகக் அவர் குறிப்பிட்டார். ஏனெனில் மிகச் சிறிய எண்ணிக்கையினரே அதில் சம்பந்தப்பட்டுள்ளனர்.