பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் கீழ் நாடு இருந்ததா இல்லையா என்ற வாக்குவாதங்கள் தொடரும் வேளையில் துணைப் பிரதமர் முஹைடின் யாசின், மலேசியா பிரிட்டிஷ் காலனியாக இருந்தது எனத் தாம் நம்புவதாக இன்று மக்களவையில் கூறியிருக்கிறார்.
“நாம் காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்தோமா? ஆம்! நாம் ஆண்டுதோறும் சுதந்திரத்தைக் கொண்டாடுகிறோம். அது ஒன்றுமில்லாததற்காக அல்ல”, என அவர் பிகேஆர் கோம்பாக் உறுப்பினர் அஸ்மின் அலி எழுப்பிய துணைக் கேள்விக்குப் பதில் அளித்த போது கூறினார்.
மலாய் சுல்தான்கள் பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து “ஆலோசனையை” மட்டுமே பெற்றார்கள் என சிலர் வாதாடலாம். அவர்கள் பிரிட்டிஷ் மகுடத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இல்லை என்றாலும் மறைமுகமாக அவர்கள் பிரிட்டிஷ் கட்டுக்குள்தான் இருந்தனர்.
“அவர்கள் பிரிட்டிஷ் ரெசிடண்ட்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்றனர். ஆனால் அந்த ஆலோசனை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அவர்கள் (சுல்தான்கள்) ஆட்சி புரிவதற்கான சுதந்திரத்தைப் பெற்றிருக்கவில்லை”, என அவர் சொன்னார்.
“காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தது இல்லை பாதுகாப்புக்கு உட்பட்டிருந்தது”
மலேசியா பிரிட்டிஷ்காரர்களின் “பாகாப்புக்கு உட்பட்ட பிரதேசமாகவே இருந்தது” என தேசிய பேராசிரியர்கள் மன்றத் தலைவர் ஜைனல் கிளிங் கூறிக் கொண்டதைத் தொடர்ந்து மலேசியா காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்ததா இல்லையா என்பது மீதான விவாதம் சூடு பிடித்தது.
1874ம் ஆண்டு பங்கோர் ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் மலாயா காலனித்துவ ஆட்சியின் கீழ் கொண்டு வரப்படும் என்பதற்கான ஆவணங்கள் ஏதுமில்லை என்பதே அதற்குக் காரணம் என அவர் சொன்னார்.
“பாதுகாப்புக்கு உட்பட்ட பிரதேசம் என்பது காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்ததாகக் கூறப்படுவதிலிருந்து வேறுபட்டதாகும். சிங்கப்பூர், மலாக்கா, பினாங்கு ஆகியவை மட்டுமே காலனிகளாக இருந்தன. 400 ஆண்டுகளாக மலாயா காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தது எனச் சொல்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். அது பெரிய தவறு,” என ஜைனல் கிளிங் சொன்னார்.
1946ம் ஆண்டு முதல் 1947ம் ஆண்டு வரை நடப்பில் இருந்த மலாயன் யூனியன் போதும் ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போதும் மட்டுமே மலாயா காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்தது என அவர் குறிப்பிட்டார்.