சீரமைப்பு நடக்கும் என்று தெரியவில்லை, ஆனால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் திட்டமும் பெர்சேயிடம் இல்லை

ambikaஅரசாங்கம் நடவடிக்கை எடுக்காமலிருப்பது, தேர்தல் ஆணைய (இசி)த்தின் தாமதிக்கும் போக்கு, வெளிநாட்டுப் பார்வையாளர்களை அழைப்பதில் ஆர்வம் இல்லாதிருப்பது, பரவும் அரசியல் வன்முறை-இவை எல்லாமே தேர்தல் சீரமைப்பு நடைபெறப்போவதில்லை என்பதைத் திட்டவட்டமாக உணர்த்துகின்றன.

இந்நிலையில், தேர்தல் சீரமைப்புக்காக போராடும் அமைப்பான பெர்சே அதைக் கண்டித்து தெரு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமா என்று அதன் இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசனிடம் வினவியதற்கு அதற்கான திட்டம் எதுவும் இல்லை என்றார். அவர் இன்று கோலாலும்பூரில் செய்தியாளர்களிடம் பேசினார்..

வெளிநாட்டில் உள்ள வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதிலும் இசி மெதுவாக செயல்படுகிறது என்று அம்பிகா வருத்தப்பட்டுக்கொண்டார்.

வாக்காளர் பட்டியலைத் ‘துப்புரவுபடுத்த’ ஆணையம் அமைத்திருக்கும் சிறப்புப் பிரிவு வெளிப்படையாக செயல்படுமா என்பதிலும் தமக்கு ஐயம் உண்டு என்றாரவர்.

ஆணையத்தின் உயர் அதிகாரிகளில் சிலர் அம்னோ உறுப்பினர்கள் என்று தெரிவிக்கப்பட்டதற்கு அதன் அதன் தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் அளித்த பதில் குழப்பமாக இருந்ததைக் காணும்போது ஆணையம் சுயேச்சையாகத்தான் செயல்படுகிறதா என்று கவலை கொள்வதாகவும் அவர் சொன்னார்.

ambika1“இவை எல்லாம் உண்மையான சீர்திருத்தம் காணும் கடப்பாடு இல்லை என்பதையும் அண்மைய எதிர்காலத்தில் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது என்பதையும் அதனால் 13வது பொதுத் தேர்தல் மிக மோசமான ஒரு தேர்தலாக அமையப்போகிறது என்பதையும்தான் காண்பிக்கின்றன”, என்றாரவர்.

என்றாலும் பெர்சே அதற்காக தெரு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடாது.  அதற்குப் பதிலாக மக்களைத் தேர்தல் பார்வையாளர்களாக பயிற்றுவிக்கும் JomPantau இயக்கத்திலும், வாக்காளர்களை முழு அளவில் திரண்டு வந்து வாக்களிக்கச் செய்து வாக்களிப்பில் தில்லுமுல்லு நிகழாமல் பார்த்துக்கொள்வதை உறுதிப்படுத்திக்கொள்ளும் Jom100 இயக்கத்திலும் பெர்சே கவனம் செலுத்தும் என்றார்.

தேர்தல் முறைகேடின்றி துப்புரவாக நடப்பதை உறுதிப்படுத்த,  குடிமக்கள் தேர்தல் பார்வையாளர்களாக பணியாற்ற மேலும் அதிகமான தன்னார்வலர்கள் தேவைப்படுவதாக அம்பிகா தெரிவித்தார்.

1bersihசெய்தியாளர் கூட்டத்தில் கலந்துகொண்ட இன்னொரு இணைத் தலைவரான ஏ.சமட் சைட்(வலம்), பதிவு செய்துகொண்டுள்ள வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க திரண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

“வாக்களிக்கும் தகுதி உள்ள அனைவரும் வாக்களிக்கச் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன். இதன்வழிதான் இசி தில்லுமுல்லு செய்வதைத் தடுக்க முடியும்”, என்றார்.

பேரணிகளுக்கு பேர் பெற்ற பெர்சே மீண்டும் பேரணி எதையும் ஏற்பாடு செய்யுமா என்று வினவியதற்கு மாற்றங்கள் ஏற்படும்போது செய்தித்தாள்களுக்குத் தெரிவிக்கப்படும் என்று அம்பிகா சொன்னார்.

“இப்போதைக்கு இவ்வளவுதான். வேறு எதுவும் இருந்தால், உங்களுக்குத் தெர்விப்போம்”.

பொதுத் தேர்தல் நெருங்கி வருவதால் பெர்சே இயக்கக்குழு அடிக்கடி சந்தித்து அவ்வப்போதுள்ள நிலவரத்துக்கு ஏற்ப முடிவெடுக்கும் என்றவர் விளக்கினார்.