சிப்பாங்கில் சாமிமேடையை மறுபடியும் கட்டுவதற்கு குடியிருப்பாளர்கள் எதிர்ப்பு

1altarசிப்பாங் முனிசிபல் மன்ற(எம்பிஎஸ்) த்தால் உடைக்கப்பட்ட சாமிமேடையை மீண்டும் கட்டுவதற்கு பிஎன் கட்சிகள் அமோக ஆதரவு தெரிவித்துள்ள போதிலும் உள்ளூர் மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

1altar 1kamarulசாமிமேடையை மீண்டும் கட்டுவது அங்குள்ள 95 விழுக்காடு மலாய்க்காரர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பிடிக்கவில்லை என்று தாமன் சரோஜா குடியிருப்பாளர் சங்கத் தலைவர் கமருல்சமான் மாட் ஜைன் தெரிவித்தார்.

அங்கு குறைந்த எண்ணிக்கையில்தான் இந்தியர்கள் வசிக்கிறார்கள் என்பதால் இருக்கும் வசதிகளே போதும் என்றும் புதிதாக ஆலயங்கள் கட்டுவது தேவையில்லை என்றும் அவர் சொன்னார்.

1altar 2 protesசாமிமேடை மீண்டும் கட்டப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சுமார் 100 குடியிருப்பாளர்கள் நகராட்சி மன்றத்துக்கு வெளியில் கூடியிருந்தனர். அவர்கள் ‘குடியிருப்புப் பகுதியில் ஆலயம் வேண்டாம்’, ‘வட்டார மக்களின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள்’, ‘டே, எங்களை எதிர்க்க வேண்டாம்’ என்ற வாசகங்களைக் கொண்ட அட்டைகளைத் தாங்கியிருந்தனர். மலாய்க் குடியிருப்பாளர்கள் கலந்துகொண்ட அக்கண்டனக் கூட்டம் 45-நிமிடம் நீடித்தது. போலீஸ்காரர்களும் அருகில் நின்று கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நவம்பர் மாதம் 30ம் தேதி பண்டார் பாரு சாலாக் திங்கியில், தாமான் சரோஜாவில், செப்பாங் நகராட்சி மன்றத்தைச் சேர்ந்த 30 அமலாக்க அதிகாரிகள் ஒரு வீட்டு வளாகத்துக்குள் நுழைந்து அங்கிருந்த சிறிய சாமி மேடையை உடைத்தனர்.

சாமிமேடை உடைக்கப்பட்டதை பிஎன் கட்சிகளும் பக்காத்தான் ரக்யாட் இந்தியத் தலைவர்களும் கடுமையாகக் கண்டித்தனர். சமய விவகாரங்களில் மாநில அரசு கடைப்பிடிக்கும் நடைமுறைகளை மீறி அமலாக்க அதிகாரிகள் நடந்துகொண்டதாக அவர்கள் குறை கூறினர்.

மஇகா இளைஞர் பகுதி அதன் தலைவர் டி.மோகன் தலைமையில் கடந்த சனிக்கிழ்மை சாமிமேடையை மறுபடியும் கட்ட உதவியது.

அது கமருல்சமானுக்குப் பிடிக்கவில்லை. அக்கட்சி விவகாரத்தை மேலும் சிக்கலாக்கி இருக்கிறது என்றவர் சாடினார்.

“மஇகா இளைஞர்களின் நோக்கம்தான் என்ன? விவகாரம் சூடாக விவாதிக்கப்பட்டு வரும் வேளையில் சாமிமேடை மீண்டும் கட்டப்பட்டது சரியான நடவடிக்கை அல்ல”, என்றாரவர்.

அப்படிச் சொல்வது சிறுபான்மையினர் உரிமைகளை மறுப்பதாகாதா என்று வினவியதற்கு அவர் பதிலளிக்கவில்லை.

மந்திரி புசாருக்கு மகஜர்

1altar4சாமிமேடையை உடைக்கும் எம்பிஎஸ் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து 756 குடியிருப்பாளர்கள் கையெழுத்திட்ட மகஜர் ஒன்று மந்திரி புசார் அலுவலகத்துக்கு நேற்று அனுப்பப்பட்டிருப்பதாக கமருல்சமான் தெரிவித்தார்.

பின்னர் அவர் இரண்டு குடியிருப்பாளர் உடன்வர, சாமிமேடை இருந்த வீட்டுக்குச் சென்று அதன் உரிமையாளரிடம் மகஜரின் பிரதி ஒன்றை கொடுப்பக்தற்காகச் சென்றார்.

அதனை வீட்டு உரிமையாளரின் சகோதரி எம்.தனலட்சுமி, தம் சகோதரர் வீட்டில் இல்லை என்று கூறி பெற்றுக்கொண்டார்.

தனலட்சுமி, இவ்வாண்டு முற்பகுதியில்தான் சாமிமேடை விரிவாக்கப்பட்டது என்றும் அங்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் சொன்னார்.

“15ஆண்டுகளாக இங்கு வசிக்கிறோம்…….சாமிமேடை எங்கள்  குடும்பதாருக்கு மட்டுமே”, என்று கமருல்சமானிடம் அவர் தெரிவித்தார்.

அதற்கு கமருல்சமான்,, ஊராட்சி மன்ற விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் சாமிமேடை தொடர்பில் அவர்கள் எம்பிஎஸ்ஸிடம் முறையீடு செய்யலாம் என்றார்.

தனலட்சுமியின் அண்டைவீட்டுக்காரர் ஜுரினா முகம்மட். ஆறாண்டுகளாக அவர் அங்கு வசித்து வரும் அவர் அந்த இந்திய குடும்பத்தால் பிரச்னை ஏற்பட்டதில்லை என்று மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

“அவர்கள் சமயத்தை அவர்கள் பின்பற்றுகிறார்கள். என் சமயத்தை நான் பின்பற்றுகிறேன். எங்கள் உறவு நன்றாக உள்ளது”, என்றார்.

ஒருவேளை  சாமிமேடை விரிவாக்கப்பட்டது சில முஸ்லிம்களுக்குப் பிடிக்காதிருக்கலாம் என்றும் அவர் சொன்னார்.