பேராக் தாப்பாவுக்குச் செல்லும் வழியில் பிகேஆர் பிரச்சாரப் பஸ்ஸின் கண்ணாடி நொறுக்கப்பட்டது மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக பிகேஆர் குறை கூறியுள்ளது. அதனால் அது ஏமாற்றம் அடைந்துள்ளது.
சம்பவம் நடந்த இடத்தில் கட்சி ஊழியர்கள் ஒரு மணி நேரத்துக்கு மேல் காத்திருந்ததாகவும் போலீஸ்காரர்கள் யாரும் வரவில்லை என்றும் அதன் நடவடிக்கைச் செயலாளர் ராடென் சம்சுல்கமார் ராடென் சம்சுடின் கூறினார்.
“நாங்கள் ஒசிபிடி-யை அழைத்து தகவல் தெரிவித்தோம். நடவடிக்கை எடுப்பதாக அவர் சொன்னார். ஆனால் யாரும் வரவில்லை. அதனால் நாங்கள் போலீஸில் புகார் எதுவும் செய்யவில்லை. அந்த வாகனம் மீது ஏற்கனவே நடத்தப்பட்ட தாக்குதல்கள் சம்பந்தப்பட்ட புகார்களுக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை,” என அவர் நிருபர்களிடம் சொன்னார்.
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையுக் 333வது கிலோமீட்டருக்கும் 327வது கிலோமீட்டருக்கும் இடையில் 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி மாலை மணி 6.30 வாக்கில் அந்தப் பஸ்ஸின் ஜன்னால் கண்ணாடி மீது கல் எறியப்பட்டது என பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் கூறினார்.
தாப்பாவில் தீபாவளி நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக கட்சி ஊழியர்களை கோலாலம்பூரிலிருந்து அந்த பஸ் ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்ததாகவும் கட்சித் தலைவர்கள் யாரும் இல்லை என்றும் ராடென் தெரிவித்தார். அவர்களுடன் பினாங்கிலிருந்து வரும் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் குழு சேர்ந்து கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது.
“அந்தக் கல் எங்கிருந்து வந்தது என்பது எங்களுக்குத் தெரியவில்லை. என்றாலும் நீல நிற பிஎன் சட்டைகளை அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிள் ஒன்றில் சென்ற குழுவினரை பஸ் கடந்ததாக ஒட்டுநர் தெரிவித்தார்,” என ராடென் மலேசியாகினியிடம் கூறினார்.
ஏற்கனவே கிளந்தான், ஜோகூர், மலாக்கா ஆகியவற்றில் அந்தப் பஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் யார் மீதும் குற்றம் சாட்டப்படவில்லை. புலனாய்வு அறிக்கை சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக போலீஸ் கூறிக் கொண்டுள்ளது.
“மலாக்கா தாக்குதல் தொடர்பில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டு தாக்குதல்காரர்கள் என நால்வரஅடையாளம் காணப்பட்டனர். ஆனால் அவர்கள் மீது இன்னும் குற்றம் சாட்டப்படவில்லை,” என்றார் அவர். அந்தச் சம்பவத்தில் பஸ் மீது சாயம் வீசப்பட்டது.
தாக்குதல்காரர்கள் மீது துப்பாக்கியைக் காட்டியதாக கூறப்பட்ட அன்வார் மெய்க்காவலர் மீதான விசாரணையையும் போலீஸ் முடித்துக் கொண்டுள்ளது என்றும் விசாரணைகள் தொடரப் போவதில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர் என்றும் அவர் சொன்னார்.
இதனிடையே இந்த நாட்டில் ஜனநாயகம் மோசமான நிலையில் இருப்பதை அந்த வன்முறைகள் காட்டுவதாக கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் நூர் மானுட்டி கூறியுள்ளார். “புத்ராஜெயாவைத் தற்காப்பதற்கு எலும்புகள் நொறுங்கட்டும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் 2011ம் ஆண்டு அம்னோ பொதுப் பேரவையில் கூறியதின் தொடக்க அறிகுறிகள் அவை,” என்றார் அவர்.