‘லிம் குவான் எங் உத்துசானுக்கு எதிராக இனவாதத் தாக்குதலைத் தொடுக்கவில்லை’

“உத்துசான் மலேசியாவில் அவதூறானது எனக் கூறப்பட்ட கட்டுரை வெளியிடப்படுவதற்கு வழி கோலிய குறிப்பிட்ட கருத்துக்கள் எதனையும் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் வெளியிடவில்லை” என்பதை உத்துசான் மலேசியா செய்தி ஆசிரியர் ஒருவர் பினாங்கு உயர் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.

தாம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் தேதி வெளியிடப்பட்ட ‘குவான் எங்கின் ஆணவம் ( ‘Kebiadaban Guan Eng) என்னும் தலைப்பிலான அந்தக் கட்டுரையை எழுதுவதற்கு பணிக்கப்பட்டதாக சுல்கிப்லி பாக்கார்

என்ற அந்த செய்தி ஆசிரியர், ஜக்தீப் சிங் டியோ குறுக்கு விசாரணை செய்த போது நேற்று நீதிமன்றத்தில் கூறினார்.

அந்தப் பணி குறித்து தாம் தமது தலைமை ஆசிரியருடன் விவாதித்ததாகவும் அவர் தமது கருத்துக்களைத் தெரிவித்தார் என்றும் கடந்த 18 ஆண்டுகளாக உத்துசானில் பணியாற்றி வரும் சுல்கிப்லி சொன்னார். ஆனால் கட்டுரை முழுவதும் தாம் சொந்தமாக எழுதியதாகும் என அவர் குறிப்பிட்டார்.

‘உண்மையான மலேசியர்களுக்காக மக்கள் அரசாங்கம்’ என்னும் தலைப்பில் லிம் கடந்த ஆண்டு கெப்பாளா பாத்தாஸில் பக்காத்தான் ராக்யாட் மாநாட்டில் நிகழ்த்திய உரையின் அடிப்படையில் அமைந்திருந்த அந்தக் கட்டுரையை உத்துசான் வெளியிட்ட பின்னர் அதன் மீது அவதூறு வழக்கை லிம் தொடுத்துள்ளார்.

அவர் நீதிமன்றம் பொருத்தமானது எனக் கருதும் இழப்பீடுகளையும் கோரியுள்ளார். ஜப்பானுக்கு இரண்டு நாள் அலுவல் பயணம் மேற்கொண்டுள்ளதால் லிம் நீதிமன்றத்துக்கு வரவில்லை.

1969ம் ஆண்டு மே 13ம் தேதி நிகழ்ந்த இனக் கலவர அனுபவம் அவருக்கு உண்டா என்ற கேள்விக்குப் பதில் அளித்த சுல்கிப்லி தாம் அப்போது ஒரு வயதுக் குழந்தையாக இருந்ததாகச் சொன்னார். என்ன நடந்தது என்பதை பின்னர் அறிந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“உத்துசானுக்கு எதிரான இனவாதத் தாக்குதல்களுக்கு பதில் அளிக்கும் வகையில் உங்கள் கட்டுரை எழுதப்பட்டதாக நீங்கள் சொல்கின்றீர்கள். அந்த மாநாட்டில் லிம் எழுப்பியதாக நீங்கள் உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள விஷயங்களை பேசினாரா ?” என ஜக்தீப் வினவினார்.

தமது கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் லிம் உரையில் இடம் பெறவில்லை என்பதை சுல்கிப்லி ஒப்புக் கொண்டார். அவரது உரையின் பொதுவான கண்ணோட்டம் என அவர் விளக்கினார்.

அந்த உரையில் தவறான கருத்துக்கள் ஏதும் இருந்ததா என்ற கேள்விக்கு சுல்கிப்லி எதிர்மறையாகப் பதில் அளித்தார்.

அந்த இடம் உரையில் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படும் விஷயங்கள் மீது அந்த நாளேடு இது நாள் வரையில் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையும் சுல்கிப்லி ஒப்புக் கொண்டார்.