-ஜே.சிம்மாதிரி, பாகாங் மாநில ஜ.செ.க துணைத் தலைவர், டிசம்பர் 18, 2012.
நம் நாட்டில் குளிர்ச்சியான ஜனரஞ்சக சூழல் அமைந்துள்ள ஆகப் பெரிய (72,000 ஹெக்டர்) ஒரே இடம் கேமரன் மலைதான் என்றால் அது மிகையில்லை.
கேமரன் மலையின் இந்த குளிர்ச்சிக்கு எப்படியாவது சாவு மணி அடிக்க வேண்டும் எனக் கங்கணம் கட்டிக் கொண்டு முழுமூச்சாக அல்லும் பகலுமாக பாடுபடுகிறது பகாங் மாநில தேசிய முன்னணி அரசாங்கம்.
ஆம்! கேமரன் மலைக் காடுகள் நாள்தோறும் அழிக்கப்பட்டு வருகிறது. காடுகளை வெட்டி அழிப்பவர்கள், உள்நாட்டினர் அல்ல. வெளிநாட்டுத் தொழிலாளர்களான வங்களாதேசிகளும் மியான்மார் வாசிகளும்.
இத்தொழிலாளர்களுக்கு ஊதியம் தந்து காடுகளை அழிப்பது அரசாங்க மாவட்ட நில துறையைச் சேர்ந்த ஒரு சில அதிகாரிகளே. இதனை மாநில மந்திரி பெசாரே ஒப்புக்கொண்டுள்ளார். (The Star – 12.10.2012)
அழிக்கப்படும் இவ்வகை காடுகளை இங்குள்ள விவசாயிகளுக்கு இந்த அரசு ஊழியர்கள் ‘விற்று’ விடுகிறார்கள். இதனால் ஆயிரக்கணக்கான ஹெக்டர் காடுகள் அழிக்கப்பட்டு இயற்கையான சூழிநிலைகள் மாற்றம் கண்டு; குளிர்ச்சிக்குப் பாதகம் விளைவது மட்டுமல்லாமல் தண்ணீர் தட்டுப்பாடுப் பிரச்னையும் தலைதூக்கியுள்ளது.
இதுகுறித்து காவல்துறையில் பல புகார்கள் செய்தும் எவ்வித பலனுமில்லை. தங்களால் ஒன்றும் செய்ய இயலாது என கூறிவிட்டனர்.
சுற்றுச் சூழல் துறையிடம் புகார் செய்யப்பட்டது, அவர்களும் கைவிரித்துவிட்டனர்.
இவ்வகையில் இதே ஆட்சி நீடிக்குமானால் இன்னும் ஓராண்டில் கேமரன் மலை தரைமட்டமாகிவிடும். அப்புறம், அழுதோ புலம்பியோ கதறியோ எந்த பயனுமில்லை.
கேமரன் மலையை எப்படி காப்பாற்றுவதென்று புரியாமல் தவிக்கிறோம்.