எம்ஆர்டி சுரங்கப் பாதை விஐபி-யின் வீட்டைத் தவிர்ப்பதற்காக திருத்தப்பட்டது

விஐபி ஒருவருக்குச் சொந்தமான ஒரு சொத்தைத் தவிர்க்கும் பொருட்டு டமன்சாராவுக்கு அருகில் உள்ள எம்ஆர்டி சுரங்கப்பாதையை நிலப் பொதுப் போக்குவரத்து ஆணையம் திருத்தி அமைத்தது குறித்து பக்காத்தான் எம்பி-க்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த ஆணையம் இரட்டை வேடம் போடுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

தொடக்க நிலைத் திட்டத்தில் எம்ஆர்டி சுரங்கப் பாதையில் காணப்பட்ட- அந்த விஐபி-யின் ஆடம்பர மாளிகை மர்மமான முறையில் காப்பாற்றப்பட்டு விட்டதாக பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா குற்றம் சாட்டினார். அவர் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் பேசினார்.

ஏற்கனவே வேலைகள் நடந்து கொண்டிருந்த போதிலும் ஜாலான் டூத்தாவுக்கு அப்பால் ஜாலான் டமன்சாராவில் அந்த மாளிகையிலிருந்து தள்ளி சுரங்கப்பாதையை அமைக்குமாறு குத்தகையாளருக்கு வழங்கப்பட்ட திருத்த ஆணையின் வழி விஐபி-யின் மாளிகை காப்பாற்றப்பட்டதாக அவர் கூறிக் கொண்டார்.

எம்ஆர்டி சுரங்கப் பாதை அமைக்கப்படும் இடங்களுக்கு மேற்பரப்பில் உள்ள மற்ற சொத்துக்களை கையகப்படுத்துவதற்கு நிலப் பொதுப் போக்குவரத்து ஆணையம் நடவடிக்கை எடுத்து வருவதை சுட்டிக் காட்டிய புவா”, அந்த விஷயங்களை எதிர்கொள்வதில் பின்பற்றப்படும் இரட்டை வேடம் குறித்து அரசாங்கம் விளக்க வேண்டும்”, என அவர் கேட்டுக் கொண்டார்.