நாட்டிலிருந்து கள்ளத்தனமாக வெளியேறும் மூலதன மதிப்பு உலக அளவில் மலேசியாவுக்கு இரண்டாவது இடத்தை அளித்திருப்பது மிகவும் வெட்கக் கேடானது என கெரக்கான் உதவித் தலைவர் மா சியூ கியோங் கூறியுள்ளார்.
“இத்தகைய அறிக்கைகளில் மலேசியா ஏணிப்படியில் கீழ் நிலையில் இருக்க வேண்டும். நாம் சிறிய நாடு என்பதைக் கருத்தில் கொள்ளும் போது உலகின் தலையாய மூன்று நாடுகளில் ஒன்றாக மலேசியா வைக்கப்பட்டுள்ளது மிகவும் அவமானமாக இருக்கிறது,” என அவர் சொன்னார்.
ஜிஎப்ஐ என்ற உலக நிதி கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை பற்றி மா கருத்துரைத்தார்.
2010ம் ஆண்டு மலேசியாவிலிருந்து கிட்டத்தட்ட 200 பில்லியன் ரிங்கிட் சட்ட விரோதமாக வெளியேறியுள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. அந்த பண மதிப்பு அடிப்படையில் பொருளாதார வல்லரசான சீனாவுக்கு அடுத்த நிலையில் அதாவது உலகில் இரண்டாவது இடத்தில் மலேசியா வைக்கப்பட்டுள்ளது. அந்த 200 பில்லியன் ரிங்கிட் என்பது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத பெரிய அளவாகும்.
“ஏதோ கோளாறு காணப்படுகின்றது அது அதிர்ச்சி அளிக்கின்றது. ஏனெனில் இவ்வளவு பெரிய அளவு பணம் எப்படி கண்டு பிடிக்கப்படமால் வெளியேற முடியும் என மா வினவினார்.
அந்த நிலைமையச் சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
அந்த விவகாரத்துக்குப் பின்னணியில் பெரிய கும்பல்கள் இயங்குவதாக கருதும் அவர், பாங்க் நெகாரா, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் வழியாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
“ஏற்கனவே 2009ம் ஆண்டு மலேசியா கள்ளத்தனமாக பணம் வெளியே கொண்டு செல்லப்பட்டதின் மூலம் நாட்டுக்கு 150 பில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஒர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. புதிய அறிக்கை 2010ம் ஆண்டு 200 பில்லியன் ரிங்கிட் எனச் சொல்வதால் நிலைமை மோசமடைவதைக் காட்டுகிறது,” என்றார் அந்த கெரக்கான் உதவித் தலைவர்.
அந்த விவகாரம் மீது அரசாங்கம் மக்களுக்கு விளக்கம் தரக் கடமைப்பட்டுள்ளது என கெரக்கான் மத்திய
பொருளாதாரப் பிரிவுத் தலைவருமான மா சொன்னார். காரணம் “அரசாங்கம் மக்களுடைய நலன்களைப் பாதுகாக்கவும் அவர்களுக்கு சேவை செய்யவும் வேண்டும்.”