கிறிஸ்துவர்கள் இஸ்ரேலுக்குச் செல்வதற்கான கட்டுப்பாடுகளை மலேசியா அகற்றுகிறது

jerusalemமுஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட மலேசியாவிலிருந்து கிறிஸ்துவர்கள் ஜெருசலத்திற்கு யாத்ரை மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்த எண்ணிக்கை அளவையும் மற்ற கட்டுப்பாடுகளையும் அரசாங்கம் அகற்றியுள்ளது.

மலேசிய அரசாங்க அதிகாரிகளும் தேவாலய அதிகாரிகளும் அந்தத் தகவலை உறுதிப்படுத்தினர்.

அண்மைய ஆண்டுகளில் அரசாங்கத்துக்கும் சிறுபான்மை கிறிஸ்துவர்களுக்கும் இடையில் பல சர்ச்சைகள் மூண்ட பின்னர் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அடுத்த ஆண்டு மத்திக்குள் மலேசியாவில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

மலேசியர்கள் இஸ்ரேலுக்குப் பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. என்றாலும் கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கு புனித நிலமாக கருதப்படும் ஜெருசலத்துக்கு கிறிஸ்துவர்கள் பயணம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதித்திருந்தது.

என்றாலும் அரசாங்கம் ஆண்டுக்கு 700 யாத்ரீகர்கள் மட்டுமே செல்ல முடியும் என்றும் ஒரு தேவாலயம் 40 பேர் கொண்ட குழுவை மட்டுமே அனுப்பலாம் என்றும் அரசாங்கம் கட்டுப்பாடு விதித்திருந்தது என மலேசிய கிறிஸ்துவ சம்மேளனம் கூறியது.

அத்துடன் அந்த யாத்ரைக் காலம் 10 நாட்களுக்குள் இருப்பதோடு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே ஒரு யாத்ரீகர் செல்ல முடியும் என்றும் அந்தச் சம்மேளனத்தின் நிர்வாகச் செயலாளர் தான் கோங் பெங் கூறினார்.

அந்தக் கட்டுப்பாடுகள் இனிமேல் அமலாக்கப்பட மாட்டாது என்றும் பயணங்கள் கூடின பட்சம் 21 நாட்களுக்கு இருக்கலாம் என்றும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அலுவலகம் மலேசியக் கிறிஸ்துவ சம்மேளனத் தலைவர் இங் மூன் ஹிங்-கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“என்றாலும் இஸ்ரேல் கூட அவ்வலவு நீண்ட காலப் பயணத்தை அனுமதிக்காது என நான் நினைக்கிறேன்.

கலந்துரையாடல் மூலம் வழங்கப்பட்டுள்ளதால் அதனை நாங்கள் சலுகை எனச் சொல்ல மாட்டோம்,” என அந்தக் கடிதம் கிடைத்ததை உறுதிப்படுத்திய தான் சொன்னார்.

இன்னும் எச்சரிக்கையாகவே இருக்கிறோம்

என்றாலும் அந்த நடவடிக்கை குறித்து இங் எச்சரிக்கையாக இருக்கிறார். ஏனெனில் கடந்த காலத்தில் “ஒர்அமைச்சர் ஏதாவது சொல்வார் ஆனால் நடப்பது வேறு விதமாக இருப்பது நிகழ்ந்துள்ளது,” என்றார் அவர்.

“அந்தக் கடிதத்தை உள்துறை அமைச்சு வழங்கியிருக்க வேண்டும்,” என இங் மேலும் சொன்னார். அந்தக் கடிதத்தில் தாம் கையெழுத்திட்டுள்ளதை நஜிப்பின் அரசியல் செயலாளர் வோங் நை சீ உறுதிப்படுத்தினார். “அது அமைச்சரவை முடிவு, அதனை நான் மலேசியக் கிறிஸ்துவ சம்மேளனத்துக்குத் தெரிவித்துள்ளேன்,” எனக் குறிப்பிட்ட அவர் அந்த முடிவுக்குக் காரணம் எதனையும் தெரிவிக்கவில்லை.

“மலேசியக் கிறிஸ்துவர்களுடைய தேவைகளைக் கருத்தில் கொண்டு உள்துறை அமைச்சு இஸ்ரேலுக்கான சமய யாத்ரை மீதான விதிகளைத் திருத்தியுள்ளது,” என்றும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஏஎப்பி