டிஏபி, மசீச: ஏஇஎஸ் அபராதத் தொகையைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்

தானியக்க அமலாக்க முறையின்கீழ் கொடுக்கப்பட்ட சம்மன் தொடர்பான வழக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் ஏற்கனவே அபராதம் செலுத்தியவர்களின் அபராதத் தொகை அவர்களுக்கே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என டிஏபியும் மசீசவும் கேட்டுக்கொண்டிருக்கின்றன.

11chuaபெறப்பட்ட அபராதத் தொகைகளைத் திருப்பிக் கொடுப்பதற்கு அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும் என மசீச தலைவர் சுவா சொய் லெக் கூறியதாக த ஸ்டார் செய்தி வெளியிட்டிருக்கிறது.

ஏஇஎஸ் சம்மன்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை நிறுத்திவைக்க சட்டத்துறை அலுவலகம் முடிவு செய்திருப்பதை அடுத்து அவர் இவ்வாறு கூறினார். 

பினாங்கில் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், அபராதம் செலுத்தியவர்களுக்கு அதைத் திருப்பிக் கொடுப்பதோடு ஏஇஎஸ் முறையின்கீழ் கொடுக்கப்பட்ட சம்மன்கள் அனைத்தையுமே இரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

1limசம்மன்களை இரத்து செய்யுமாறு அதிகாரிகளைப் பணிப்பதன்வழி போக்குவரத்து அமைச்சர் கொங் சோ ஹா, ஏஇஎஸ் முறையை ஆதரித்த பாவத்துக்குக் “கழுவாய்” தேடிக்கொள்ள வேண்டும் என்றாரவர்.

“அத்துடன் ஏஇஎஸை இரத்து செய்ய வேண்டும் என்று பக்காதான் ரக்யாட் கூறிவந்தது சரியே என்பதையும் பிஎன் அரசாங்கம் ஒப்புக்கொள்ள வேண்டும்”, என்று லிம் கூறினார். 

செப்டம்பரிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கும் 300,000 சம்மன்களால் பிஎன்னுக்கு எதிராக அதிருப்தி தோன்றியுள்ளது அதனால்தான் சட்டத்துறை தலைவர் அப்துல் கனி பட்டேய்ல் அதிருப்தி நிலையைத் தணிக்கப் பார்க்கிறார் என்றார் லிம்.

TAGS: